பாகிஸ்தானில் வீசும் கடுமையான அனல் காற்றுக்கு 141 பேர் பலியாகினர். இவர்களில் 132 பேர் கராச்சி நகரத்தைச் சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வெப்பத்தினால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற நோய்க்கு பலரும் பலியாகியிருப்பதாக சிந்து மாகாண சுகாதார அமைச்சர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், சிந்து மாகாண முதல்வர் சையது கயீம் அலி ஷா செய்தியாளர்களிடம் கூறூம்போது, "அனல் காற்றுக்கு அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் கராச்சி நகரில் உள்ள அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரமும், தண்ணீர் விநியோகமும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த வெள்ளிக் கிழமை ரம்ஜான் மாதத்தின் முதல் நாளன்று துறைமுக நகரான கராச்சியில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. கடந்த சனிக்கிழமையன்று கராச்சியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இதுவே இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப நிலையானது படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கராச்சி நகரில் உள்ள ஜின்னா மருத்துவமனை மருத்துவர் கூறும்போது, "மருத்துவமனைக்கு வரும் நிறைய பேருக்கு ஹீட் ஸ்ட்ரோக், நீர் சத்து குறைவு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளுடனையே வருகின்றனர். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அனல் காற்று பாதிப்புக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.(ந)
