வில்பத்து தொடர்பான ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. தமிழ் மொழி பேசும் மக்களிடையே ஹிரு பிரபல்யமானமைக்கு குறித்த விவாதமும் ஒரு காரணமாகியது. வில்பத்து தேசிய வனத்தை அழித்து முஸ்லிம்களை குடியேற்ற அமச்சர் ரிஷாத் முயற்சிக்கிறார் என்ற சிங்கள ஊடக பிரபல்யங்களுக்கு இந்த விவாதம் ஓரளவு உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால் முழுமையாக சந்தேகம் தீர்க்கப்பட்டது என்று கூறமாட்டேன்.
அமைச்சர் ரிஷாத் வாதாடியும் போராடியும் தனது பக்க நியாயத்தையும் மீள்குடியேற்றத் தடைகளையும் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் மிகுந்த பிரயத்தனத்துடன் முன்வைத்தார. சில கட்டங்களில் அவரால் இருப்புக் கொள்ள முடியாத நிலைமையில் இடையிடையே தலையிட்டு உண்மைகளை சொல்ல முயற்சித்தார்.
குறித்த விவாதத்தில் எதிர்தரப்பில் காணப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த லால் காந்த இந்த விடயத்தில் முன்னர் காட்டிய ஆக்ரோஷம் போன்றல்லாது மிக நிதானத்துடன் முஸ்லிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். அது அவரது பக்க நியாயம். அவரது கருத்துரிமை. ஆனால், அவரால் தெரிவிக்கப்பட்ட சில விடயங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.வில்பத்து குடியேற்றம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறலாம் என்ற கருத்துக்கு எனது முழுமையான மறுப்பை விளக்கத்துடன் அவருக்கு தெரிவித்தேன.
அதே பக்கத்தைச் சார்ந்த சுற்றாடல் ஆர்வலர் சுஜீவ பல விடயங்களை முன்வைத்தார். 1 சுற்றாடல்பாதுகாப்பு, 2. தேசிய வனங்களை பாதுகாத்தல், 3 வன இலாகா சட்டங்கள் என்றெல்லாம் அவர் வர்த்தமானி அறிவித்தல்கள் பலதையும் சுட்டிக்காட்டினார். அவர் பக்கத்தில் முஸ்லிம்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாபத்துக்கோ உண்மை நிலைமைக்கோ இடமில்லை. அரச வர்த்தமானி அறிவித்தல்ககளுடன் மட்டுமே அவரின் வாதாட்டம் காணப்பட்டது. அத்துடன் தன்னை ஓர் இனவாதியல்ல என்பதனை நிரூபிப்பதிலும் முயற்சிப்பதிலும் அவர் அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் இவர் அமைச்சர் ரிஷாத்தையும் அவர் சார்பான பேராசிரியர் நெளபலையும் சில இடங்களில் கீழ்த்தரமாக நோக்கி பேசியதனையும் அவர்களை அசட்டை செய்ததனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இது அவரைப் பொறுத்த வரையில் அவரால் கட்டிக்காக்கப்படும் சுற்றாடல், வனவளத்துறை பாதுகாப்பு நற்பண்புகளாக இருக்கலாம் அல்லவா? பரவாயில்லை இருந்து போகட்டும்.
மறு பக்கமாக அமைச்சர் ரிஷாத் பதியதீனும் பேராசிரியர் நெளபலும் காணப்பட்டனர். எதிர்தரப்பைச் சேர்ந்த சுற்றாடல் ஆர்வலருடன் ஈடுகொடுத்து தனது பக்க நியாயங்களை முன்வைக்க கூடியவராக நெளபல் காணப்படவில்லை. இது அவரது தவறாகவும் இருக்கலாம் அல்லது அவரது சுபாவம், பெருந்தன்மை என்றும் கொள்ளலாம்.
ஆக, அமைச்சர் ரிஷாத் பதியுதீனே தனித்து போராட வேண்டியிருந்தது. அவருக்கான நேரத்துக்குள் வில்பத்து விவகாரம் தொடர்பில் தனது பக்க நியாயத்தையும் உண்மைகளையும் எடுத்துக் கூறியது உற்சாகத்தை அளித்தது.
“தனக்கு சிங்களம் சரியாக தெரியாது என்னை மன்னியுங்கள்“ என்று பல தடவைகள் கூறிய அமைச்சர் ரிஷாத் அவர்கள் அடிக்கடி கூறிக் கொண்டே நன்றாகவே சிங்களம் பேசினார். தடுமாறவில்லை என்பதனையும் கூற வேண்டும்.
அமைச்சர் ரிஷாத் பல விடயங்களை இதன் போது சுடடிக்காட்டினார். தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்த முஸ்லிம்களை வெளியேற்றியமைக்கு பிரதான காரணங்கள் அவர்களுக்கு சார்பாக செயற்படாமை, பிரிவினைக்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம்கள் கொண்டிருந்தமை என்றும் மிகுந்த மனவேதனையுடன் கூறினார். அப்படிப்பட்ட மக்கள் இன்று அவர்களது சொந்த இடங்களில் குடியேற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று வேதனைப்பட்டார். பிரிவுபடாத நாட்டை நேசிக்கும் முஸ்லிம் மக்களுக்கே இந்த நிலைமை என்ற அடிப்படையில் தனது கருத்தை தெரிவித்தார்.
சுற்றாடல் ஆர்வலர் சுஜீவ அங்கு காண்பித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் விட்டுக் கொடுக்காத அளவுக்கு தன்னிடமிருந்த ஆதாரங்களை அடுக்கிக் கொண்டு வாதத்தை வலுப்படுத்தினார்.
அத்துடன் முஸ்லிம்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாகின்ற நிலையில் தற்போது அங்கு காடுகள் வளர்ந்துள்ளன. அங்கு மீள்குடியேறச் செல்லும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இன்று வளர்ந்து கிடக்கும் பற்றைக் காடுகளை வெட்டி சுத்தப்படுத்தினால் அது சட்டவிரோத குடியேற்றமா? சட்ட விரோத காடழிப்பா என்ற கோணத்தில் கேள்விகளை அடுக்கினார்.(மனம் நெகிழ்ந்தது)
அத்துடன் குறித்த காணிகள் வில்பத்து வன பிரதேசத்துக்குச் சொந்தமானது அல்ல என்றும் முஸ்லிம்களுக்கு உரியவை. அதுவும் சட்ட ரீதியானவை என்றெல்லாம் ஆதாரங்களை அடுக்கிச் சென்றார்.
சட்டவிரோதமாக யாராவது காடுகளை அழித்தால் அதனைக் கவனிப்பது தனது வேலையல்ல என்றும் அதற்குரியவர்கள் அதனை பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறிய அமைச்சர், இலக்கத் தகடுகள் அற்ற வாகனம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதனைப் பிடிக்கும் வேலை தனக்குரியதல்ல என்ற தோரணையில் பதிலளித்து வாயை அடக்கிய அவரின் இளம் துடிப்பு பாராட்டுக்குரியது.
இத்துடன் இந்த அலசலை முடித்துக் கொண்டு இன்னொரு விடயத்தைச் சற்று இங்கு ஆராய விரும்புகிறேன்
வில்பத்து விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரான ரவூப் ஹக்கீமும் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்படுவதனை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான சிலரின் தவறான கணிப்பு, விமர்சனங்கள், பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். வில்பத்து விவகாரம் ரிஷாத் பதியுதீனின் தனிப்பட்ட விடயமல்ல என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நன்கு உணர்ந்துள்ளது. இப்போது எழுந்துள்ள இது தொடர்பான நிலைமைகள் குறித்தும் அமைசச்ர் ஹக்கீம் அவர்கள் நன்கு அறிந்துள்ளார்.
இந்த விடயத்தில் அமைதியாக காய்நகர்த்தியே வெற்றியடைய வேண்டுமென்ற ஹக்கீமின் பழுத்த ராஜதந்திரத்தை நாம் மெலிதாக எடை போடுவது தவறானது.
ஒரு பொறுப்பான அரசியல் கட்சி, அதன் தலைவர் என்ற வகையில் எந்த விடயங்களையும் நின்று, நிதானித்துச் செயற்பட வேண்டியவராக அவர் உள்ளார். சுட்டுக் கொதிக்கிறது மடியைப் பிடி என்று காரியமாற்றினால் கையையும் சுட்டு மடியும் தீர்ந்த கதையாகி விடும். இந்த அடிப்படையில்தான் அமைசச்ர் ஹக்கீம் இந்த விடயத்தில் செயலாற்றுகிறார்.
நாங்கள் அவசரப்படுவது போன்று மிக முக்கியமான விடயத்தில் அமைச்சர் ஹக்கீமினால் செயற்பட முடியாது. சில விடயங்களை வெளியிலிருந்து பார்ப்பதற்கும் உள்ளிருந்து அனுபவிப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம்.
இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீமும் பரபரப்புடன் செயற்பட்டால் அதுவே சிங்கள இவாதிகளுக்கு ஆகப் பெரிய இனவாதப் பிரசார தீனியாகி, இருப்பதனையும் இல்லாமல் செய்து விடலாம் எனவே, சலசலப்பை விட பப்படமே இந்த விடயத்தில் தேவை!
கொலன்னாவையில் முஸ்லிம்களுக்கு தனியான பாடசாலை ஒன்றின் தேவையை வலியுறுத்தியவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களே. அதேவேளை, அண்மையில் இந்த விடயம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து பேசியவர்களில் அமைச்சர் ரிஷாத்துடன் ஹக்கீமும் சென்றிருந்தமையை நாம் அறியவில்லையா? இது போன்று தான் எது... எப்போது... எங்கு.. என்ற நிலைமையை வரும் போது அவர்கள் முஸ்லிம்களின் விடயங்களில் இணைந்து செயற்படுவார்கள் என்பதே எனது நம்பிக்கை.
எனவே, நாங்களாக சில விடயங்களில் கற்பனைத் திறன்மிக்கதான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்துக் கொண்டு விமர்சிப்பதில் அர்த்தமில்லை அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே எனது நிலைப்பாடு மிகப் பொறுப்புமிக்க விடயங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது ஆபத்தான விடயம் மட்டுமல்ல... அனைத்தையும் சிதைத்து விடும் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சீதையக் கெட்டவள் என்று கூற முயற்சித்தால் அவள் அயோத்தியிலேயே உண்மையாக கெட்டிருக்கலாம். தவிர, அவள் அசோகா வனத்தில் கெட்டுப் போனவள் என்று கட்டுக் கதை சொல்லக் கூடாது அல்லவா?
நன்றிகளுடன்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
