ந.குகதர்சன்-
வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு ஏதுவான பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரத்தியேகக் கல்விச் செலவின் ஒரு பகுதியினை பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் மாதந்தோறும் வழங்குவதற்கான திட்டத்தின் ஆரம்ப வைபவம் கல்லூரி மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் அதிபரும், பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான த.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக, க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 04 மாணவர்களுக்கு, இம்மாதத்துக்கான கல்விச் செலவில் ஒரு பகுதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் ப.தவேந்திரராஜ், செயலாளர் ம.பிரகாஷ், பொருளாளர் ச.கார்த்தீபன் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களின் கல்விச் செலவில் ஒரு பகுதியினை மாதந்தோறும் வழங்குகின்ற இந்நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் காலங்களில் பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களது உதவியோடு இந்நிகழ்ச்சித்திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் வண்ணம் இலவசக் கல்விக் கருத்தரங்குகள், இலவச பரீட்சை, முன்னோடிப் பயிற்சிச் செயலமர்வுகளையும் நடத்துவதற்கு தாங்கள் தீர்மானித்துள்ளதாகவும், இச்செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பழைய மாணவர் சங்க செயலாளர் ம.பிரகாஷ் தெரிவித்தார்.





