சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.
தற்போது, இந்த செய்தியை இயக்குனர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார். ஆனால், அப்பா, மகன் கேரக்டரில் நடிப்பதாக கூறாமல், இந்த படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
அதில் ஈழத்தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறியிருக்கிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல் முறை. அதனால், படத்தை மகிழ்ச்சியோடு பாருங்கள் என்று கூறியுள்ளார்.
‘மாசு’ படம் பேய் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
