அபூமனீஹா-
பயங்கரவாதம் நிலவிய காலத்தில் அமைதியான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திய அனுபவம் எனக்குள்ளது. அதேபோன்று, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் மூலம் - முடிந்தவரையில் மக்களுக்கு சேவை புரிவதே எனது நோக்கமாகும் என்று இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயற்பாட்டுப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் ஊடகப் பணிப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் உள்ள, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளராக எஸ்.எல்.எம். ஹனிபா மதனி உதியோகபூர்வமாக தமது கடமைகளை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பின் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஹனீபா மதனி மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் செயற்பாட்டுப் பணிப்பாளராக தன்னை நியமித்த - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீமுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவதாகவும் இதன்போது அவர் கூறினார்.
ஹனீபா மதனி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய ஜனாதிபதியும் பிரதமரும் நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினூடாகவும் நல்லாட்சிக்கான ஆதரவினை வழங்க முடியும். அதை இக் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.
அரசியலிலும், சமய - சமூக, சமாதானப் பணிகளிலும் ஈடுபடுவதற்கு முன்பு, கட்டிட நிர்மாணத்துறையில் - உயர் தரத்திலான நிறுவனமொன்றினை நடத்திய அனுபவம் எனக்குள்ளது. அந்த அனுபவத்தினைப் பயன்படுத்தி, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினூடாக, சிறப்பான பணியினை ஆற்ற முடியும் என்று நான் நம்புகின்றேன்.
இதேவேளை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில், செயற்பாட்டுப் பணிப்பாளர் பதவியினை எனக்கு வழங்கிய - எனது கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு இந்த இடத்திலும், எனது நன்றிகளை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
மேலும், எனது கடமையினை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வினை, மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் மற்றும் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீரவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜாப்தீன், கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிதிப் பணிப்பாளரும், அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சீ. எஹியாகான் மற்றும் மு.காங்கிரசின் ஸ்தாபக செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் உட்பட கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)