அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக ஏ.எம். அப்துல் லத்தீப் நியமனம்!

எஸ்.எம்.அறூஸ்-
க்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.அப்துல் லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நிலையில்தான் பதவி உயர்வு பெற்று அக்கரைப்பற்றுக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதேச செயலாளரான ஏ.எம்.அப்துல் லத்தீப் அண்மையில் தனது கடமையை பொறுப்பெடுத்துக் கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம்.சலீம் உத்தியோகபுர்வமாக தனது பொறுப்புக்களை புதிய பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்ததுடன் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பொறுப்புக்களை பாரமெடுத்ததன் பின்னர் பிரதேச செயலக ஊழியர்களினால் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்விலும் புதிய பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். 

இங்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உரையாற்றுகையில்;

கடந்த ஒன்பது வருடங்களாக உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி சிறந்த அனுபவத்தைக் கொண்ட அப்துல் லத்தீப் அவர்கள் அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறைப் பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார்.

சிறந்த ஆளுமையைக் கொண்ட அப்துல் லத்தீப் அவர்கள் இப்பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு சந்தோசமடைவதாகவும் கூறினார். அவரின் நிர்வாகத் திறமைக்கு சான்றாக அவர் கடமையாற்றிய அலுவலகத்தின் ஊழியர்கள் பெருமளவானோர் இங்கு சமூகமளித்திருப்பதைக் கூறலாம். புதிய பிரதேச செயலாளருக்கு இங்குள்ள ஊழியர்கள் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு உரையாற்றிய புதிய பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப் உரையாற்றுகையில்;

நமது பிரதேச செயலகத்தின் முன்னேற்றத்திற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். ஒரு குழுவாக எல்லோரும் இணைந்து செயற்படுவதன் மூலமே மக்களுக்கான சேவைகளை வழங்க முடியும்.

இடமாற்றங்கள் என்பது நிரந்தரமானது. ஆனால் நாம் ஒரு இடத்தில் கடமையாற்றும்போது எதனைச் செய்தோம் என்பதுதான் முக்கியமாகும். மக்களுக்கான பணிக்கு நம்மை நாம் தயார்படுத்த வேண்டும் என்றார்.

புதிய பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப் பல்துறை ஆளுமை கொண்டவர் என்பதுடன் பொதுமக்களின் நலனில் எப்போதும் அக்கரை கொண்ட ஒருவருமாவார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் கலாசார விழாவை நடத்துவதில் பெரும் பங்களிப்பினைச் செய்து கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.(ந)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -