பாறுக் ஷிஹான்-
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள், பொலிஸாரது செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் .ஏ ஜயசிங்கவிற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கலந்துரையாடலில், யாழ். குடா நாட்டில் உள்ள மக்களிடத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் போக்குவரத்துப் பொலிஸார் இலஞ்சம் பெறுவது உள்ளிட்ட அவர்களது சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் போதைப்பொருள் பாவனையும் யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ளது என்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் அதற்கு அடிமையாகின்றனர் என்ற விடயமும் பேசப்பட்டது.
எனவே எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமையினை இல்லாதொழிப்பதற்கு ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் தகவல்களை வழங்கி பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் ஒரு சில பொலிஸாரின் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பொலிஸ்திணைக்களத்தினையும் தவறாக எண்ண வேண்டாம். அவ்வாறு தவறுகளை செய்யும் பொலிஸார் மீது மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டத்துடன் சேவையினை வழங்குவதே எமது நோக்கம். பொலிஸ் நிலையத்திற்கு வரும் ஒரு சாதாரண பொதுமகன் தன்னுடைய வேலைகளை சரிவரச் செய்ய முடியவில்லை எனின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தலாம். அவரும் சரிவர செய்யாது விட்டால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முறையிடலாம். அங்கும் நீதி கிடைக்கவில்லை எனின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முறையிடலாம்.
அங்கும் சரியாகவில்லை என்றால் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிடலாம். அவராலும் முடியவில்லை என்றால் வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறையிடலாம். சீருடை அணிந்தாலும் நாங்களும் மனிதர்களே. பொதுமக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி குற்றச் செயல்களற்ற வடக்கு மாகாணத்தை உருவாக்குவதே எனது கடமை என்றார்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)