பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொண்டுவரத் தீர்மானித்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சேபனைத் தெரிவிக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐ.ம.சு.மு. எதிர்பார்ப்பதாகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொண்டுவர எதிர்பார்க்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்? அவர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த :-
’20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையூடாக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டாம் என்று ஜனாதிபதியால் கூறமுடியாது. இது நாடாளுமன்றத்தின் நடவடிக்கையாகும். எப்படியிருப்பினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவில்லை’ என்றும் கூறினார்.ச
