எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்த தோணாவில், இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்து குறித்த அபிவிருத்திக்கு காரணமாக இருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்குமுகமாகவும் குறித்த பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கோரியும், சாய்ந்தமருது தோணாவின் அருகில் வசிக்கும் மக்களால் ஒப்பமிடப்பட்ட மகஜர் ஒன்று அமைச்சரிடம் கையளிக்குமுகமாக காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி அவர்களிடம் 2015-05-26 இல் கையளிக்கப்பட்டது.
மிக நெருக்கமான சனத்தொகையைக் கொண்ட சாய்ந்தமருதை ஊடறுத்துச்செல்லும் தோணா என்று அழைக்கப்படும் நீரோடை பலவருடங்களாக சரியான முகாமைத்துவம் இல்லாததனால் சுகாதாரத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் காணப்பட்டது. குறித்த தோணாவை சுத்தம் செய்து அதனை இப்பிராந்திய மக்கள் பொழுதுபோக்கக் கூடிய இடமாக மாற்றித்தருமாறும் மழைகாலங்களிலும் வயலில் வடிச்சல் திறக்கும் வேளையிலும் இலகுவாக நீர் வடிந்து செல்லக்கூடியவாறும் பாதுகாப்பு வேலி இல்லாததன் காரணமாக அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறும் இப்பிரதேச மக்களாலும் விசேடமாக அநேக ஊடகங்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இம்மக்களாலும் ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு காலத்துக்குக் காலம் சிறிய அளவில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கோள்ளப்பட்ட போதிலும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி அங்கு இடம்பெறவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமைகளாலும் சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பான அமைப்பினாலும் பல்வேறு அபிவிருத்தி சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதில் தோணா அபிவிருத்தியும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
குறித்த அமைப்புக்களை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் தாமாக முன்வந்து சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்து தருவதாக வாக்களித்திருந்தார். தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் பயனாக முதற்கட்ட வேலைகளுக்காக சுமார் 30 மில்லியல் ரூபாய்களை ஒதுக்கீடு செய்து கடந்த 2015-05-15 ல் அபிவிருத்திப்பணிகளை அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இங்குள்ள சிலரால் வெறும் கண்துடைப்பு வேலைகள் என கூறப்பட்ட போதிலும், தற்போது இடம்பெற்றுவரும் சுத்தமாகும் பணிகளால் தோணாவின் அருகில் வசிக்கும் மக்கள் மகிழவடைவதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு நன்றி கூறுவதோடு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்ந்தும் துரிதமாகவும் இடம்பெறவேண்டும் என்றும் இப்பிராந்திய மக்கள் அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தோணாவில் காணப்படும் கழிவுகளை அகற்றுவதோடு நின்றுவிடாது தோணாவின் இருமருங்கிலும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படவேண்டும். அத்துடன் குறித்த உயரத்துக்கு வலை வேலி அமைக்கவேண்டும் மரங்கள் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்படவேண்டும். பாதைகள் அமைக்கப்படவேண்டும் பாலங்கள் அமைக்கப்படவேண்டும் இருக்கைகள் சிறுவர் பூங்காக்கள் என்பன போன்றவைகளை அமைக்கவேண்டும் விசேடமாக கழிவுகளை தோணாவில் இடாதவாறு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அதேவேளை அன்றாடம் கழிவுகளை அகற்றக்கூடிய வேலைகளை மாநகரசபை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் அமைச்சரிடம் திறந்த கோரிக்கைகளாக இப்பிராந்திய மக்கள் முன்வைக்கின்றனர்.(ந)





