சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் புதிய தேர்தல் முறை இருக்கும்-கஹக்கீம்

ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-

சிறுபான்மைச் சமூகங்கள் இந்த புதிய ஆட்சி மாற்றத்திற்குச் செய்த பங்களிப்பை மறந்து விடாமல், இந்தச் சமூகங்களுக்கு பெரிய ஆபத்துகள் எவையும் ஏற்பட்டு விடாமல், அவற்றுகான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவையாக இருந்த போதிலும், சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல், ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையின் பின்னணியில் தான் அவர்களோடு மிக பக்குவமாகவும், சாணக்கியமாகவும், நேர்மையாகவும் சில நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (31) மாலை தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரப்புக் கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு, பட்டமளிப்பு விழா, இப்றாஹிமியா தொழில்நுட்ப கல்லூரி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

தமது உரையின் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

மிக விரைவில் ஒரு தேர்தலை எல்லோரும் எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்ற நிலையில், இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தினால், ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்று அமையவேண்டிய தேவை இருக்கின்றது. 

ஒவ்வொரு தடவையும் பாராளுமன்றம் கூடுகின்ற போது பெரிய களேபரம் தான் நடக்கின்றது. எதையும் உருப்படியாக செய்யவிடாமல், முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் குழப்ப நிலையை உருவாக்குகின்ற விஷயத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். 

போதாக்குறைக்கு அரசியலமைப்பில் புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை அவசரவசரமாக திணிப்பதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் தற்பொழுது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை தற்பொழுதுள்ள தேர்தல் முறையை விடவும், இந்த சமூகத்திற்கும், பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கும் வாய்ப்பான இன்னொரு தேர்தல் முறையைக் கொண்டுவருவது என்பது சம்பந்தமான பல சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒரு போராட்டமே வெடித்திருக்கின்றது. 

அந்தப் போராட்டத்தில் பல ஏச்சு பேச்சுகளுக்கு மத்தியில் நாம் அதனை தலையில் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆயினும் இந்த நாட்டின் அரசியல் தலைமைத்துவங்களான ஜனாதிபதியும், பிரதமரும் சிறுபான்மைச் சமூகங்கள் இந்த புதிய ஆட்சி மாற்றத்திற்குச் செய்த பங்களிப்பை மறந்து விடாமல், இந்தச் சமூகங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு விடாமல், அவற்றுகான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவையாக இருந்த போதிலும், சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல், ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையின் பின்னணியில் தான் நாங்கள் அவர்களோடு மிக பக்குவமாகவும், சாணக்கியமாகவும், நேர்மையாகவும் சில நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

எனவே, இவ்வாறான விடயங்களில் பாரிய சிக்கல்களும், விளைவுகளும் ஏற்பட்டு விடாமல் எங்களை இறைவன் பாதுகாக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் முஸ்லிம் சமய, கலாசார விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக், அஷ்ஷெயிக் அகார் முஹம்மத், மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரியின் பொருளாளர் தேசகீர்த்தி வை.எம்.இப்றாகீம், அரபுக் கல்லூரியின் தலைவர் ஏ.ஆர். அப்துல் ரஸ்ஸாக் ஆகியோரும் இன்னும் பலரும் உரையாற்றினர். உடவத்தே விமல புத்தி தேரர், தெல்தோட்டை பிரதேச செயலாளர் உத்பல ஜயரத்ன உட்பட உலமாக்களும், பிரமுகர்களும், பெருந்தொகையான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -