பொத்துவில் பிரதேச மக்கள்; அரசியல் கொள்கை ரீதியில் ஒற்றுமைப்பட்டு நமது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணி புரியும் பிரதிநிதிகளை தெரிவு செய்து நமது நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
அதற்கான எத்தனங்களை இப்போதிருந்தே பொத்துவில் பிரதேச மக்களும், இளைஞர் அமைப்புக்களும், பொது இயக்கங்களும் இணைந்து செயல்பட்டு பொத்துவில் பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்கு நம்பிக்கையுள்ள அரசியல் கட்சியின் தலைமையில் கொள்கை ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என பொத்துவில் - 05, களப்புக்கட்டு கிராமத்தில் தேசிய காங்கிரஸ் கிளைக்குழு புனரமைப்பு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் வளர்ச்சிப் பணிகளுக்கு, உலமாக்களும், நாளைய தலைவர்களான நமது இளைஞர்களும், பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவது குறித்து தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
பொத்துவில் பிரதேச மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் மாத்திரம் செயல்படும் சில அற்ப அரசியல் வாதிகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தெரிவித்து மக்களை குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர்.தேசிய காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா(MP) அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
'நாம் எப்போதும் நல்லவைகளைப் பற்றி எண்ண வேண்டும், எண்ணமே வாழ்வு எனக் குறிப்பிடுவார். நல்ல காரியங்கள் நடை பெறுவதற்கு நமது மனங்களில் நல்ல எண்ணங்களை எண்ணி செயற்படும் போது நமது செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு இறைவன் நமக்கு உதவி புரிவான்' எனக் கூறுவார்.
தேசிய காங்கிரஸூக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காலமெல்லாம் பொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால பொதுத் தேவைகளை இணங்கன்டு உண்மைக்குண்மையாக எங்களால் முடிந்தளவு உட்கட்டமைப்பு பணிகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம். இதனால் நமது பொத்துவில் பிரதேச மக்கள் இன்று தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்கு உரமாக மாறி வருகின்றனர்.
இந்த வளர்ச்சியினால் நமது அரசியல் இருப்பிடம் இல்லாமல் போய் விடும் என்ற அச்சத்தினால் சில அரசியல்வாதிகள் நிதானம் இழந்து அண்மைக்காலமாக அறிக்கை விடுகின்றனர். நாங்கள் கடந்த காலங்களில் பொத்துவில் மக்களை நேசித்து பணி புரிந்துள்ளோம். நான் பொத்துவில் பிரதேச மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நமது பெறுமதிமிக்க வாக்குகளை பெறுவதற்காக மட்டும் வருகை தந்து நமது மக்களின் உணர்ச்சிகளை உசிப்பிவிட்டு நமது வாக்குகளை பெற்றுச் செல்லும் அரசியல் கலாச்சாரத்திற்கு நமது மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் நமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் நமக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியில் அக்கரை செலுத்தும் அரசியல் கட்சிக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்கி பொத்துவில் பிரதேசத்திற்கு உரித்தான அரசியல் அதிகாரத்தினை பெறுவதற்கு நாம் இணந்து செயல்பட வேண்டியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில நமது பொத்துவிலுக்கு அருகில் உள்ள பாணமை பிரதேச மக்களின் காணிகளை இரானுவத்தினரிடம் இருந்து விடுவிப்பதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இனைந்து அவசர அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். பாணம மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பாணம மக்களின் காணிகளை ராணுவம் எடுத்துக் கொண்டதனால்தான் லகுகல பிரதேச சபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் வசமானது என்பதனை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.
நீண்ட கால யுத்தத்தில் வட மாகாண தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் பாரம்பரிய காணிகளை இரானுவத்தினர் பிடித்துக் கொண்டிருந்தனர். புதிய அரசின் 100 திட்டத்தில் தமிழ் தலைவர்கள் அவசரமாக செயல்பட்டு அம்மக்களின் காணிகளை விடுவித்து பொது மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிகழ்வு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சற்று நிம்மதி அடையக் கூடிய வகையில் நிலமை உருவாக்கி உள்ளது. இந்த முயற்சியையும் நாம் பாராட்டுகின்றோம்.
அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக காணிகளை இழந்த பிரதேசங்களில் பொத்துவில் பிரதேசமே முதன்மையானது. பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை வனவள பாதுகாப்பினர், இரானுவத்தினர் இனைந்து முஸ்லிம் மக்கள் அவர்களின் காணிகளுக்குள் செல்வதற்கு தடை விதித்துள்ளனர். பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க அவசர அமைச்சரவை சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் பொத்துவில் முஸ்லிம் மக்களின் காணிகளை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டமை குறித்து நாம் எல்லோரும் வேதனைப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை நாம் நமது அரசியல் பலத்தினால் மாத்திரமே தீர்க்க வேண்டும். பொத்துவில் - களப்புக்கட்டு வீதிகள், மின்சார, வடிகான் திட்டங்கள் என்பன தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா(MP) அவர்களின் அரசியல் அதிகாரத்தினால் நிறைவேற்றப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இப்பிரதேச மக்களின் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடிந்தளவு முயற்சி செய்வோம் எனக் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.பதுர்கான்(பிரதேச சபை உறுப்பினர்), கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எல்.ஏ.காதர், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் ஆலோசனை சபையின் ஆலோசகர் கே.அப்துல் அஸீஸ்(மௌலவி), கொள்கை பரப்புச் செயலாளர்கள் கிராம சேவகர் பிரிவுகளுக்கான அமைப்பாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள், உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
