ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரிய சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியதன் மூலமாக அந்த ஓவியத்தைச் சிதைத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கையப்பமிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
தனது மகளுக்கு நடந்த கதியை ஊடகங்கள் வெளிக் கொண்டுவந்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள துணைபுரிந்த ஊடகங்களுக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியைத் தெரிவிப்பதாக அந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு- சித்தாண்டிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி உலகப் பிரசித்தம்பெற்ற சிகிரிய சுவரோவியத்தைப் பார்ப்பதற்காக தனது தொழில் நண்பர்களுடன் இணைந்து சென்றிருந்தவேளை இந்த ஓவியச்சுவரில் தனது பெயரை எழுதி ஓவியத்தைச் சிதைத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)