நிந்தவூரில் அனாதரவற்றுக் கிடக்கும் ஆறு தோண்டும் இயந்திரம்- SLMC அரசியல் வாதிகளின் கவனத்திற்கு!

 சுலைமான் றாபி-

நிந்தவூரில் சுமார் பத்து வருடங்களாய்  நிலவும் நொச்சியடி மாட்டுப்பளை மற்றும் மாட்டுப்பளை வடகண்ட பிரதேசங்களில் வயற் காணிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் பயிரழிவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிந்தவூர் நொச்சியடி முகத்துவாரத்தின் வடிச்சல், வாய்க்கால் தோண்டுவதற்காக கடந்த ஜனவரி மாதம் 05ம் திகதி (2015.01.05) நிந்தவூர் பெரியபாலம் ஆற்றின் மூலமாக தோண்டுதல் பணிகள் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டன.
 
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சிற்குச் சொந்தமான இந்த மிதந்த வண்ணம் ஆறு தோண்டும் இயந்திரம் (சுநதநச) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாட்டுப் பணிகள் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்பு கிழக்கு மாகாண சபையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதினையடுத்து இதன் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டு இந்த இயந்திரம் கவனிப்பாரற்ற நிலையில் நட்டாற்றில் காணப்படுவதனை அவதானிக்க முடிந்தது.
 
உண்மையில் இந்த நொச்சியடி, மாட்டுப்பளை மற்றும் மாட்டுப்பளை வடகண்டமானது கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியால்  முற்றாகப் பாதிக்கப்பட்டு இதுவரைக்கும் வாய்க்கால் பிரச்சினைகள் சீர்செய்யப்படாது காணப்படுகின்றது. இதனால் வெள்ளப் பெருக்குக் காலங்களில் குறிப்பிட்ட  காணிகளில் நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் அதிகளவான பயிரழிவுச் சேதங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இங்கு சுமார் 500 ஏக்கர் வயற்காணிகள் தொடர்ச்சியாக பாதிப்பிற்கு உள்ளாவதோடு இதன்மூலம் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
 
இது இவ்வாறு இருக்க இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு முதற்கட்டமாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களினால் 02 மில்லியன் ரூபா ஒதிக்கீடு செய்து தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளை  பாதியில் கைவிடப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது. மேலும் இந்த இயந்திரத்தின் மூலம் அண்மையில் கோணாவத்த மற்றும்  செம்புக்களப்பு போன்ற திட்டங்களில் சுமார் 8,000 ஏக்கர் காணிகள் பிரயோசனம் அடைந்ததும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
 
மேலும் கிழக்கு  மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இந்தப் பகுதி மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும் இவ்விடயத்தில் கரிசனையற்றுக் காணப்படுகின்றார். மேலும் இந்த வாய்க்கால் மேம்பாட்டு விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண  சபை உறுப்பினர்களும் கரிசனையற்றுக் காணப்படுகின்றார்களா அல்லது இவர்களால் இதன் மேம்பாட்டுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாமல் உள்ளதா என விவசாயிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பல கேள்விக்கணைகள் எழுந்த வண்ணமாகவே இருக்கின்றது.
 
எனவே நிந்தவூரின் முதுகெலும்புகளில் ஒன்றாகக் காணப்படும் விவசாயத்துறையில் பயிரழிவைக் கட்டுப்படுத்த இந்த மேம்பாட்டுத்திட்டதினை முன்கொண்டுசெல்லுவதற்கு தற்போது உசிதமான காலநிலை காணப்படுவதனால் இவைகளை உடனடியாக நிறைவு செய்து கொடுப்பது அரசியல் வாதிகளின் தலையாய கடமையாகும் அல்லவா??

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -