நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி தொடர்பில் தற்போது அமுலில் உள்ள நடைமுறைகளில் பாரியளவில் மாற்றங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் பாடசாலையை அண்மித்த பகுதிகளில் வதிவோருக்கு விசேட வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புள்ளி வழங்கும் நடவடிக்கைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதோடு இதற்கு மேலதிகமாக தற்போது நடைமுறையில் உள்ள புள்ளி வழங்கும் முறைமையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி தொடர்பிலான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் கோரப்படுகின்ற போதிலும், புதிய முறைமையின் கீழ் மே மாதமே விண்ணப்பிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இவற்றுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை, நேர்முகத் தேர்வு, மேன்முறையீடு, பெயர் பட்டியல் வெளியீடு போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அதே ஆண்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முதலாம் தவணையிலேயே சகல மாணவர்களையும் தரம் ஒன்றில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன
