இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையின் விசாரணைகள் குறித்த விசேட அறிவிப்பு ஜூன் இறுதியில் விடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
´ரைம்ஸ்´ ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு விஜயம் சென்றிருந்த போது ´பிபிசி´ ஊடகத்திற்கு செவ்வி அளித்த ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை ஒரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
எனினும் பொதுத் தேர்தலுக்கு முன் ஜுன் இறுதியில் போர்க்குற்ற விசாரணை குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பில் போர்க்குற்ற விசாரணைக்கு உறுதியான உள்நாட்டு பொறிமுறை உள்ளதென்பதை ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நாட்டுக்கு பாரிய பிரச்சினை என்றும் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யாரையும் பகைத்துக் கொள்ள தாம் தயார் இல்லை என்றும் அனைத்து நாடுகளுடனும் நேசக்கரம் நீட்டி செயற்படத் தயார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தென்னாபிரிக்காவில் காணப்பட்ட வடிவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இது தொடர்பில் தென்னாபிரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாரத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ´ரைம்ஸ்´ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்குலவை நண்பராக்கி சீனாவுடன் பகைத்துக் கொள்ளும் தேவை தமக்கு இல்லை என்றும் இலங்கைக்கு மேற்குலகம், இந்தியா, சீனா போன்று அனைத்து நாடுகளும் முக்கியம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
