அரசியலமைப்பு திருத்தசட்டம் தொடர்பான விவாதத்தை தடுப்பதற்கான நோக்கத்துடனே பாராளுமன்றத்தில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு திருத்த சட்டத்தை தடுத்து அவசரமாக பொது தேர்தலை நடாத்தி அதன் மூலம் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிலரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலரும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தசட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சந்தர்ப்பத்திலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமையும் சந்தேகத்திற்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை 19ஆம் திருத்த சட்டத்திற்கமைய தேர்தல் முறைமை மாற்றத்தினை உட்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 20ஆவது அரசியலமைப்பு திட்டத்திற்கு ஹெல உறுமய ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
