புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி-
காத்தான்குடி நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆளுந்தரப்பு உறுப்பினராகவுள்ள எச்.எம்.எம். பாக்கீர் என்பவரால் நடாத்தப்பட்டு வரும் தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவியை கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியன்று குறித்த நகர சபை உறுப்பினர் அவரது காரில் கல்முனைக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு நடைபெற்று வந்த வழக்கில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (21.04.2015) குறித்த நகர சபை உறுப்பினரைக் குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12.25க்கு இவ்வழக்கு அழைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் சட்டத்தரணி எஸ்.எச்.எம். ரிஸ்வியும், எதிரியின் சார்பில் சட்டத்தரணி எப்.எக்ஸ்.எஸ். விஜயகுமாரும் மன்றில் ஆஜராயினர். நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் இவ்வழக்கில் எதிரியை மன்று குற்றவாளியாகக் கண்டிருப்பதாகத் தெரிவித்ததுடன் அவரது கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் தீர்ப்பறிக்கை எதிரிக் கூட்டில் எதிரி பிரசன்னமாகி இருந்த நிலையில் நீதிமன்றின் முதலியாரால் 25 நிமிடங்கள் வாசிக்கப்பட்டன. இத்தீர்ப்பறிக்கையில் முறைப்பாட்டாளரான பாதிக்கப்பட்ட மாணவியின் சாட்சியம், இச்சம்பவத்தை விசாரித்த பொலிஸ் அதிகாரியின் சாட்சியம், சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம், எதிரியால் அளிக்கப்பட்ட வாக்குமூலம் என்பன உள்ளடக்கப்பட்டிருந்ததோடு, இவ்வாறான மேலும் சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட மாணவியினால் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்கு மூலம், நீதிமன்றில் அளிக்கப்பட்ட சாட்சியம், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்திய பொலிஸ் அதிகாரியின் சாட்சியம், சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் என்பன ஒன்றுக்கொன்று முரணற்ற வகையில் அமைந்திருப்பதால் எதிரியின் குற்றச்செயலானது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் இத்திர்ப்பறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின்போது எதிரி தெரிவித்த வாக்கு மூலத்தில், தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நகர சபை உறுப்பினர் என்றும், தனியான கல்வி நிலையமொன்றை நீண்ட காலமாக நடாத்தி வருவதோடு சுமார் 1500 மாணவ மாணவிகள் தற்போதும் தன்னிடம் கல்வி கற்று வருவதாகவும், இதுவரை இவ்வாறானதொரு குற்றச்சாட்டு தன்மீது சுமத்தப்படவில்லையென்றும், இக்குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் திட்டமிட்டு சுமத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
எதிரியின் சார்பான தொகுப்புரையை மன்றில் அணைக்குமாறு பல தவணைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு தொகுப்புரை எதுவும் மன்றில் அணைக்கப்படவில்லை என்பதையும் தீர்ப்பறிக்கை சுட்டிக்காட்டியது.
காத்தான்குடியில் இயங்கி வந்த எதிரியின் பிரத்தியேகக் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்கவென வந்த முறைப்பாட்டாளரான 19 வயதுடைய ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவியை எதிரி தனது காரில் கல்முனைக்கு அழைத்துச் சென்று அவரைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தியதாகவும், எதிரியின் தொல்லைகளைத் தாங்க முடியாத இம்மாணவி கல்முனையிலிருந்து காத்தான்குடிக்குத் திரும்பி வரும் வழியில் கிராண்குளம் எனுமிடத்தில் காரின் கதவைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கித் தப்பித்ததாகவும், இதன்போது அவ்வழியே வந்த பொதுமக்கள் இம்மாணவியைக் காப்பாற்றி காத்தான்குடிக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் காத்தான்குடிப் பொலிசாரால் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சம்பவம் நடைபெற்று சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இன்றைய தினம் எதிரி குற்றவாளியே என நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கான தண்டனை எதிர்வரும் மே மாதம் 26ம் திகதி வழங்கப்படும் எனவும் நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் தெரிவித்தார்.
