அரசுக்கு சவால்விடும் பொதுபலசேனா!

ரஸீன் ரஸ்மின்-

'முஸ்லிம்களிடமிருந்து கூரகலயை காப்பாற்றிக் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்' என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் புதிய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

இலங்கை அரசுக்கு பொதுபலசேனாவினால் சவால் விடுக்கப்படுவது இதுவொன்றும் புதியவிடயமல்ல. பொதுபல சேனா போன்ற சிங்கள ராவய, ராவணா பலய போன்ற கடும்போக்கு இனவாதக்கட்சிகள் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கு கடந்த காலம் தொட்டு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர்.

இனவாத விதையை தூவிவிட்டு உசுப்பேத்தி ஆட்டங்காண வைக்கும் மேற்குறித்த இனவாதக்கட்சிகளை கடந்த மஹிந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாமையும், அதன் விளைவை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசு பெற்றுக்கொண்டதையும் நான் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

பொதுபலசேனாவைக் கட்டுப்படுத்த தவறியது உண்மைதான் மனம் வருந்தும் மஹிந்த

பொதுபலசேனாவையும், அந்த அமைப்பின் செயலாளரான ஞானசார தேரரையும் அமைதியாக இருக்குமாறும், அமைப்பு மற்றும் அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தான் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் பலமுறை கூறியதாகவும், ஆனால் அவர் அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தொன்று அண்மையில் பத்திரிகையில் வெளியாகிருந்தது.

இதேவேளை, பொதுபலசேனாவுக்கு எதிராக எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமயக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தன்னிடம் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆக, முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும், பொதுபலசேனாவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், பொதுபலசேனா அமைப்பு முன்னைய அரசின் நேரடிக் கண்காணிப்பில்தான் இயங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொதுபலசேனாவுக்கு பாலூட்டி, சீராட்டி, உசுப்பேற்றி, பாதுகாப்புக்கு அங்கீகாரம் வழங்கி நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எரதிராக உடை, பௌதீகவளங்கள் ரீதியாக போராட்டங்களை நடத்தியுள்ளமை இப்போது அம்பலமாகியுள்ளது.

எனவே, பொதுபலசேனா போன்ற பேரினவாத அமைப்புக்களை முன்னைய அரசு கட்டுப்படுத்துவதற்கு தவறியதன் விளைவாக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நல்லாட்சியை ஏற்படுத்தப் போகிறோம் அதற்கு வாக்களியுங்கள் என்று களத்தில் நின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான அன்னம் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்தால் பொதுபலசேனாவின் ஆட்டம் அடங்கி விடும் என்று நினைத்து அன்று வாக்களித்த முஸ்லிம் மக்கள் மத்தியில் இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசில் பொதுபலசேனா எப்படி ஆட்டம் போட்டதோ அதுபோல இந்த மைத்திரி ஆட்சியில் சிங்கள ராவய எனும் கடும்போக்கு அமைப்பு முஸ்லிம்களுக்கெதிராக தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. அன்று பொதுபலசேனா இன்று சிங்கள ராவய பெயர்தான் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் அதன் செயற்பாடுகள் அப்படியே பொதுபலசேனாவைப் போல அச்சடித்திருக்கிறது.

எனவே, நல்லாட்சியை நோக்கி பயணிக்கும் மைத்திரி ஆட்சியிலும் இனவாத அமைப்பொன்று நினைத்தபடி ஆடுவதற்கு இடமளிக்கப்படுகிறதா என்பது இப்போது முஸ்லிம் மக்களுக்குள்ள பெரும் கேள்வியாகும்.

பொதுபலசேனா முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டது

இதற்கிடையில் அண்மையில் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேன செயற்பட்டதாக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டது பொதுபலசேனாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியது. குறித்த கருத்து தொடர்பில் ஜனாதிபதி நிரூபித்தால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிட்டு காவியுடையையும் களைந்துவிட்டு ஜனாதிபதியின் வேலைக்காரராக பணிபுரிவதாகவும் பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் சவால் விடுத்திருந்தார்.

இதேவேளை, பொதுபலசேன அமைப்பு எமது ஆட்சியில் வாளாட்டினால் அந்த அமைப்பினரை பிடித்து நாய்க்கூண்டினுல் அடைப்போம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதூங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது குறிப்பிட்டிருந்தார்.

எனவே, நல்லாட்சியை நோக்கிப் பயணிக்கும் தருணத்தில் நாட்டில் மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு இனவாத அமைப்பான சிங்கள ராவய , பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புக்கள் மிகத்தீவிரமாக திட்டமிட்டு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன.

எனவே இதுவிடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்பாகும். கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை இந்த அரசும் செய்யக் கூடாது என்பதையே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்.

இனவாதம், மதவாதம் பேசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இந்த நாட்டில் இனவாதங்களை தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆத்துடன்,எந்தவொரு மதஸ்தலங்களுக்கும் பலாத்காரமாக பிரவேசித்து வன்செயல்களில் ஈடுபட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் மதரீதியான பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதூங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இனவாதம் மற்றும் மதவாதம் பேசுபவர்களுக்கு எதிராக சட்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், அதனை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான அமைச்சரவை அங்காரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் உறுதிமொழிகளுக்கமைய இச்சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மத, இனவாதம் பேசுபவர்களுக்க இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளமையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

இனவாத அமைப்புக்களை தடைசெய்யுங்கள்;

எனவே, இவ்வாறான சட்டதிருத்தங்கள் பெரும்பாலும் எமக்கு பெரும் மன நிம்மதியைக் கொடுப்பதாக இருந்தாலும், இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை தடைசெய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையினால புதிய அரசு மிகத்தீவிரமாக செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இன்று இலங்கையுடன் நல்லுறவை வைத்துள்ள சவுதி அரேபியா, கட்டார், பாகிஸ்தான் போன்ற அரபு நாடுகள் இலங்கை அரசு மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரபு நாடுகளுக்கு சென்று வருகிறார். அதுபோல அரபு நாட்டுத் தலைவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள்.

எனவே, அரபு நாடுகளுடனான தொடர்பினால் இலங்கை பொருளாதாரம் மற்றும் சுற்றுலாதுறையில் அதிக நன்மையடையவிருக்கிறது. எனவே, இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் விடயங்களில் அக்கறை செலுத்துவதன் மூலம் இலங்கை அரசு மீது அரபு நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நன்மதிப்பும் மேலும் வலுவடையும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -