அஹமட் ஸப்னி-
கூரகல பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லிம் வணக்கஸ்தலத்தைத் தாக்கியழிக்கும் நோக்கில் மண்வெட்டி, இரும்பு முதற்கொண்டு ஆயுதங்களுடன் ராவணா பலய அங்கு வந்ததாக தெரிவித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் ரவண் குணசேகர.
குறித்த அமைப்பினர் அங்கு பிரவேசிப்பதற்கு நீதிமன்றத் தடை இருப்பது அறிவிக்கப்பட்டும் அதைப் பொருட்படுத்தாது கடும்போக்கு துறவிகள் உட்பட சுமார் 150 பேர் அங்கு வருகை தந்ததாகவும் அவர்கள் குறித்த இடத்தில் அமைந்துள்ள வணக்கஸ்தலத்தைத் தகர்க்கும் நோக்கில் மண்வெட்டி,இரும்புக்கம்பிகள் உட்பட கூரிய ஆயுதங்களுடன் அங்கு வருகை தந்ததாகவும் இதனாலேயே தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டு கூட்டத்தைக் கலைத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராவணா பலய, தாம் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கிலேயே சென்றதாகவும் அதனடிப்படையில் தாம் ஊர்வலமாகச் சென்ற வேளையில் சிவில் உடையில் இருந்த பொலிசார் தம் மீது கற்கள் வீசித் தாக்குதலை நடாத்தியதோடு தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தொல் பொருட்திணைக்களம் இப்பிரேசத்தில் பள்ளிவாசல் ஒன்று அமையப் பெற்றிருப்பினும் இது பௌத்த புராதன வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுவதால் அங்கிருந்து வேறு இடத்தில் பள்ளிவாசலை நிறுவுவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டு 1990 அளவில் மாற்று இடம் வழங்கப்பட்டதாகவும் எனினும் இதுவரை அவ்விடத்தில் அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லையெனவும் தெரிவிப்பதோடு 1920 அளவிலேயே இங்கு பள்ளியொன்று நிறுவப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
