இ. அம்மார்-
புனித ஹஜ் விவகாரம் கடந்த கால அரசாங்கத்தில் கடுமையாக விமர்சனத்திற்கு உட்பட்டதாக இருந்தது. நல்லாட்சி என்ற போர்வையில் முஸ்லிம்களுடைய புனிதமான ஹஜ் விடயத்திலும் கடந்த காலத்தைப் போல சீர்குலைப்பதற்கும் ஊழல், மோசடி போன்ற விடயங்களில் ஈடுபடுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த புனித மார்க்க விடயமான ஹஜ் விவகாரம் தொடர்பாக அவதானித்து அதற்குரித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய கலாசார அமைச்சுப் பதவி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த அரசாங்கத்தினால் 20 வருடங்களாக வழங்கப்படாத அமைச்சு வழங்கப்பட்டமை என்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.
இது ஹஜ் விடயம் தொடர்பாக முஸ்லிம் சமய கலாசார அமைச்சு உண்மையானதும் ஹஜ் யாத்திரைகளுக்கு பாதகமில்லாத வகையிலும் கட்டணத்தைக் குறைத்து ஏழை மக்களையும் ஹஜ் செய்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக முஸ்லிம் சமய கலாசார அமைச்சு சவூதி அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியிலான உறவுகளைப் பேணி ஆக்கபூர்வமான முயற்சி முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருதாக ஊடகவாயிலாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலமாகவும் அறிய முடிந்துள்ளது.
ஒரு முஸ்லிம் சமய கலாசார அமைச்சு அது தனக்குரிய பணியை யாருடைய தலையீடுமின்றி செய்வதற்கு ஒரு நல்லாட்சிக்கான அரசாங்கம் வழிவகுக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கடந்த காலத்தில் இந்த ஹஜ் விவகாரங்களில் ஈடுபட்டவர்கள் எனப் பெயர் குறிப்பட்ட அரசியல்வாதிகள் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட வலுவிழுந்த கடிதத்தை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு சூழ்ச்சியில் இறங்கி புனித ஹஜ் விடயத்தை குழப்பி வருகின்றனர். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்த இரு அரசியல்வாதிகள் தொடர்பாக கடும் விமர்சனமங்கள் எழுந்துள்ளன.
ஹஜ் விவகாரம் தொடர்பாக சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கு சகல உரிமைகளும் கொண்ட அமைச்சர் ஹலீம் இருக்கிறார். எந்த இலாகாவுமற்ற இந்த அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம்களுடைய புனித்துவம் வாய்ந்த மார்க்க விடயத்தில் கைவைத்து ஏனைய சமூகத்தினர் மத்தியில் மலினப்படுத்தும் வகையில் நடவடிக்கையில் இறங்கியிருப்பதைப் பார்க்கின்ற போது மைத்திரி ஆட்சியும் மஹிந்த ஆட்சி போல உள்ளதாகப் புலப்படுகிறது. ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறவில்லை என்ற கதைகள் அடிபடுகின்றன.
கடந்த காலத்தில் ஹஜ் விவகாரம் தொடர்பாக கவனிப்பதற்கு ஒரு முஸ்லிம் சமய காலாசார அமைச்சு ஒன்று இருக்கவில்லை. அதனால் பெரும் சண்டைகள் பிணக்குகள் மலிந்த ஹஜ் விவகாரமாக இது தொடர்ந்து இருந்தது .ஆனால் புதிய அரசாங்கத்தில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு முஸ்லிம் சமய கலாசார அமைச்சு வழங்கப்பட்டது. அதுவும் ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில்தான் இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. இவர் தம் அமைச்சின் மூலமாக முஸ்லிம் சமய கலாசாரம் சம்மந்தமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அமைச்சர் ஹலீம் பள்ளிவாசல் புதிவு செய்துவது தொடர்பாக நாடு பூராகவும் நடமாடும் சேவை நடத்துவதற்காக விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் முதல் ஹஜ் யாத்திரை விடயம் வரை ஒளிவுமறைவின்றி கணிசமாளவு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். குறித்த சிறிது காலத்திற்குள் சம்மந்தமில்லாவர்கள் இதற்குள் மூக்கை நுழைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? இவர்களுடைய வங்குரோத்துத் தனமான அரசியலை மார்க்க விடயத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காகவா? அல்லது கடந்த காலத்தில் கொள்ளை இலாபம் சம்பாதித்த வாய்ப்பு தற்போது தமக்கு கை கூட வில்லை என்ற ஆதங்கமா என்ற கேள்விகள் தற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது முஸ்லிம்களுடைய மானத்தை மலினப்படுத்தும் செயல் மட்டுமல்ல. முஸ்லிம்களுடையே ஒற்றுமையற்ற தன்மையையும் இஸ்லாத்தின் புனித மார்க்கக் கடமையான ஹஜ்ஜினுடைய நற்பெயரையும் கெடுக்கின்ற செயலாகவே உள்ளன. சிங்கள ஊடகங்களில் இந்த ஹஜ் விடயம் தொடர்பாக விசமத்தனமான பிரச்சார முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பெரும் மனவேதனைக்குரிய விடயமாகும்.
புதிய அரசாங்கத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பான அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரவர் கடமைகளை பொறுப்புடன் சரியாகச் செய்வதே சிறந்தது. அதுவும் பயனுள்ள வகையில் செயற்படுதல் வேண்டும். தம் பொறுப்பிலிருந்து விடுபட்டு இன்னுமொரு பொறுப்பிலுள்ளவர் மீது ஏறி சவாரி செய்ய முற்படக் கூடாது. அவ்வாறு செய்ய நினைத்தால் எதனையும் சரிவரச் செய்ய முடியாது.
நல்ல காரியம் நடப்பதற்காக பொறுப்புமிக்க அதிகாரி தம் சேவையை திறன்படச் செய்வதற்காக ஐந்து பேரை வைத்திருந்தால் என்ன பத்துப் பேரை வைத்திருந்தால்தான் என்ன? இடையில் சும்மா பார்த்துக் கொண்டிருப்பவருக்கு வலி ஏற்படுவதற்கான நியாயமான காரணம் என்ன? ஒன்றும் இல்லை. பூச்சியம். வெறும் அரசியல் காய் நகர்த்தலாகத்தான் இருக்கிறது.
இந்த சிறுது காலம்தான் முஸ்லிம் சமய கலாசாரம் அமைச்சுப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்துள்ளது. இதற்குப் பொறுப்பான அமைச்சர் ஹலீம் இருக்கிறார். இன்னும் ஹஜ் காலம் கூட நெருங்க வில்லை. யாரும் கூட ஹஜ் யாத்திரை சென்று வரவும் இல்லை. இதுவொரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிறிய விடயத்தைப் பிரளயமாக்கி அரசியல் இலாபம் தேட முனையும் செயற்பாடாகும்.
யாராக இருந்தாலும் மார்க்க விடயங்களில் தங்களுடைய மனட்சாட்சிப்படி இவ்வாறான கீழ் மட்டமான செயற்பாடுகளில் எந்தவொரு அரசியல்வாதிகளும் ஈடுபடக் கூடார் என்பது எமது வேண்டுகோளாகும்.
