எஸ்.எல்.எம்.பழீல்-
அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை விடுதியில் பெப்ரவரி 22ஆம் திகதி கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ ஹசன் அலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சி.ல.மு.காங்கிரஸின் அம்பாரை மாவட்டக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாற்றமாக பழைய கட்சிப் போராளிகள்,உச்சபீட உறுப்பினர்களைப் புறந்தள்ளி ஒருதலைப்பட்சமாக அமைக்கப்பட்ட மத்தியகுழு முறைகேடானது, சட்டத்திற்கு முரணானது என முறையிட்டதன் பேரில், ஏப்ரல்18 சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சபீடக் கூட்டத்தில் அதனை இரத்து செய்து கட்சியின் தலைமை, செயலாளர் நாயகத்தின் பிரசன்னத்தில் புதிய தெரிவு செய்யப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது. புதிய தெரிவினை மே 02ஆம் திகதி செய்வதாக தலைவரினால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சியின் தலைமை, உயர்பீடத்தின் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் அவற்றை மீறும் வகையில் சட்டத்தை தனது கையில் எடுத்து பழைய பாணியிலேயே தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து அட்டாளைச்சேனை மத்திய குழுவை இன்று 23-04-2015 மாலை கூட்டுவதற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இது ஒரு முறைகேடானதும் கட்சியை சர்வாதிகாரப் போக்கில் இட்டுச் செல்வதுமாகும் என கட்சியின் அதி உச்சபீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பழீல்(BA) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.