உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயக்குழு செய்துள்ள சிபாரிசுகளை அக்குழு மீள் பரிசீலனைக்காக மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
விகிதாசார கலப்பு தேர்தல் முறையை அமுல் நடத்துவதற்காகவே எல்லை நிர்ணய ஆணைக்குழு சிறுபான்மை மக்களது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு பலஅ ங்கத்தவர் தொகுதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிழக்குக்கு வெளியிலான மாவட்டங்களில் சிறுபான்மை மக்களது நலனை உறுதி செய்யக்கூடிய வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதா என்பதனை மாவட்ட அரசாங்க அதிபர்களைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா அரசியல்வாதிகள் மற்றும் சமூக அமைப்புக்களைக் கேட்டுள்ளது.
இதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு குறுகிய கால அவகாசத்தையே வழங்கியுள்ளதனால் மாவட்ட அரசாங்க அதிபர்களைச் சந்தித்து பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படக்கூடிய வகையில் பிரேரணைகளை முன் வைக்குமாறு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் கேட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதகமாக தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பின் உடன் அது குறித்து எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அவதானத்துக்கு கொண்டு வருமாறும் முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளது.
