கட்டார் அமீர் தமீம் பின் ஹமத் ஆல் தானி சற்றுமுன்னர் கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக
இலங்கையை வந்தடைந்தார்.
அவரது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகாரஅமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் செய்தி பரிமாற்றம் ஆகியன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென தெரிய வருகிறது.
இலங்கையில் தங்கியிருக்கும் சில மணித்தியாலங்களில் கட்டார் அமீர்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் அவரும் அவரது பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் பங்குபற்றவுள்ளனர்.
கட்டார் அமீரின் இலங்கை விஜயத்தை கெளரவிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்புக்கு இணங்க இலங்கை - கட்டார் ஆகிய நாடுகளின் நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
