தென்னிந்திய சினிமாவில் சாதனை படைக்கும் இலங்கை கவிஞர் - பொத்துவில் அஸ்மின்!

விஜய் ஆண்டனியின் இசையிலும் நடிப்பிலும் வெளிவந்து வெற்றி பெற்ற 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை' என்ற பாடலை எழுதி தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் பொத்துவில் அஸ்மின். அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த பாடலின் மூலம் தென்னிந்திய திரை உலகை இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர்.

இந்த வாய்ப்பு இலகுவாக கிடைத்ததொன்றல்ல பாடலாசிரியர் ஒருவரை அறிமுகம் செய்யும் நோக்கோடு விஜய் ஆண்டனியினால் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட கதைச்சூழலுக்கும் இசைக்கும் ஏற்ப பாடல் எழுதி அதில் சுமார் 20,000 போட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று ‘நான்’ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றார்.

விமல் ராஜின் இசையில் 'பனைமரக்காடு' திரைப்படத்தில் உயிரிலே உன்பார்வையால் பூப்பூத்ததே நெஞ்சிலே உன் வார்த்தைகள் தீ மூட்டுதே என்ற பாடலை அதன் பின்னர் இவர் எழுதினார். இத் திரைப்படம் இவ்வாண்டு வெளிவரவுள்ளது.

ஜெயந்தனின் இசையில் 'கடன்காரன்' திரைப்படத்துக்காக அஸ்மின் எழுதிய 'பச்சமுத்தம் நச்சுன்னுதான் தாடிபுள்ள நீ வெக்கம் விட்டு சொர்க்கம்தர வாடி புள்ள பொட்டப்புள்ள சுத்துறியே ஊருக்குள்ள ஓ வட்ட முகம் நிக்குதடி பீருக்குள்ள' என்ற கானா பாடல் கடந்த ஆண்டு கலாசார அமைச்சின் ‘தேசிய இசை விருதுகள்’ நிகழ்வில் சிறந்த கிராமிய பாடலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது.

இயக்குனர் ஜீவாசங்கரின் 'அமரகாவியம்' என்ற வெற்றித் திரைப்படத்தில் 'வாகைசூடவா' புகழ் எம்.ஜிப்ரானின் இசையில் இவர் எழுதிய 'தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே என்ற பாடல் கடந்த ஆண்டின் சிறந்த மெல்லிசை பாடல்கள் தர வரிசையில் இடம் பிடித்தன. பத்மலதா, யாஷின் நிஸார் பாடிய இந்த பாடலை பாராட்டி எழுதிய தென்னிந்திய ஊடகங்கள் அஸ்மின் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார் என குறிப்பிட்டன.

ஏஆர்கே ராஜராஜவின் இயக்கத்தில் வெளி வரவுள்ள 'யாவும் காதலே' திரைப்படத்தில் வல்லவன் இசையில் 'மார்லின் மன்றோ மகளா நீ மாடர்ன் இரவின் பகலா நீ பேர்லின்நகரின் புகழா நீ ஹூர்லின் பெண்கள் நகலா நீ என்ற இளமை துள்ளும் பாப் பாடலை இவர் எழுதியிருக்கின்றார். இந்தப் படமும் இவ்வாண்டு வெளி வரவுள்ளது.

தயாரிப்பாளரும் இயக்குனருமான ரவிச்சந்திரன் ராஜ் இயக்கத்தில் மிதூன் ஈஸ்வர் இசையில் வெளி வரவுள்ள திரைப்படத்தில் தாயின் பெருமை போற்றும் பாடல் ஒன்றை எழுதியிருக்கும் அஸ்மின் அந்த ஒரு பாடலுக்காக இந்திய பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை ஊதியமாக பெற்றுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து கூட தான் எழுதிய மூன்றாவது பாடலுக்கு இந்த தொகையை பெற்றிருப்பாரா என்பது சந்தேகமே.

'வெண்ணிலா வீடு' திரைப்படம் புகழ் வெற்றி மஹாலிங்கத்தின் 'டாவு' திரைப்படத்திலும் இயக்குனர் செந்தாமரை கண்ணன் இயக்கத்தில் வெளி வரவுள்ள திரைப்படத்திலும் அஸ்மின் பாடல் எழுத ஒப்பந்தமாகியிருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் முக்கியமான இடங்களில் நடை பெறவுள்தோடு இலங்கை கலைஞர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்குனரும் நடிகருமான அனூப் குமாரின் இயக்கத்தில் வெளி வரவுள்ள 'தேனில்ஊறிய மிளகாய்' என்ற திரைப்படத்தில் முழுப்பாடலையும் இவர் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மும் மொழிகளிலும் ஒரே நேரத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடை பெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் சஞ்சய்கதாநாயகனாக நடிக்கின்றார். ‘தேனில் ஊறவச்ச மொளகா நீ’’ என்ற பாடலில் வரும்பாடலின் வரிகளில் ஒன்றையே திரைப்படத்துக்கு பெயராகவும் பதிவு செய்துள்ளார்கள் படக் குழுவினர்.

இலங்கை பாடலாசிரியர் ஒருவரின் வரிகள் தென்னிந்தியாவில் திரைப்பட பெயராக பதிவு செய்யப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். கவிதை துறையில் பல விருதுகளை பெற்றிருக்கும் கவிஞர் அஸ்மின் ‘விடியலின் ராகங்கள்’, ‘விடைதேடும் வினாக்கள்’, ‘பாம்புகள் குளிக்கும் நதி’ ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதோடு இலங்கைத் தொலைக்காட்சியொன்றில் தயாரிப்பாளராகவும் பணி புரிந்து வருகின்றார்.

தென்னிந்திய திரை உலகில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் நம் நாட்டின் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களை நாமும் வாழ்த்துகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -