ஆணைக் குழுவின் விசாரணையில் முறைப்பாடு செய்வது எம் கடமை-சம்பந்தன்

லங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணையில் ஒருவருக்கும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கை வந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசியது குறித்து, பிபிசிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழு சமீபத்தில் திருகோணமலையில் நடத்திய நான்கு நாள் விசாரணையை தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சில புறக்கணித்திருந்த செயல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன் அந்த நிலைப்பாட்டுடன் தமக்கு உடன் பாடில்லை என்பதை தெரிவித்தார். 

இந்த ஆணைக் குழுவின் மீது ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த ஆணைக் குழுவின் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியமளிப்பது கடமை என்று அவர் கூறினார். 

இதே வேளை சுஷ்மாவை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப் பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

புதிய அரசாங்கம் மீள் குடி யேற்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதாக தெரிவித்துள்ள போதிலும், அதற்குரிய நடவடிக்கைகளை இன்னும் எடுக்க வில்லை என்று கூட்டமைப்பினர் இந்திய வெளி விவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். 

மீனவர்களின் பிரச்சினையைத் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம் என்பன குறித்தும் இந்தச் சந்திப்பின் போது இந்திய வெளி விவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வெளி விவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றி விவாதிக்கப்பட்டு உடன்பாடு எட்டப் பட்டிருப்பதாகவும், இலங்கை வருகின்ற இந்தியப் பிரதமர் இலங்கை அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -