அப்துல் ரஸாக்-
உலக கவிதை தினமான மார்ச் மாதம் 21ம் திகதியைச் சிறப்பிக்கும் முகமாக
தமிழ்க் கவிதைகளின் அமைப்பான வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) அதே தினம் கொழும்பு 12, அல்ஹிக்மா கல்லூரியில் ' உலக கவிதைகளின் போக்குகள் அவை தமிழ்க் கவிதைகளின் மேல் செலுத்தும் தாக்கங்கள்' எனும் தலைப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மாலை 4 மணிக்கு நடாத்தியது.
வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
'நாம் எமது கவிதைகளைப் படைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் உலக கவிதைகளின் போக்கு குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும். நமது கவிதைகள் சர்வதேச மயப்படுத்தப்படுவதற்கு இது ஏதுவாக இருக்கும்' என கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து அவர் குறிப்பிட்டார்.
செயலாளர் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு உலகக் கவிதைகள் பற்றிய தனது பார்வையினையும் வெளிப்படுத்தினார்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஸ்தாபகத் தலைவர், தாஸிம் அகமது தனது உரையில்;
'உலக கவிதை தினம் 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாசார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக கவிதை தினம் தொடர்பாக அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி இரினா
பொக்கோவா:
”ஒவ்வொரு கவிதையும் தனித்துவம் வாய்ந்தது. மனித அனுபவங்களின் வெளிப்பாட்டுடன் படைப்பியலின் மகத்துவத்தைக் காட்டும் கவிதைகள் நேரம், காலம், எல்லைகளையும் தாண்டி நிலைத்து நின்று மனித இனத்தை ஒரு குடும்பமாக இணைக்கும் தன்மை வாய்ந்தது” என்று கூறுகின்றார்.
இத்தினம் பல நாடுகளில் வருடாவருடம் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட்டு,பின்னர் மார்ச் மாதம் 21ம் திகதி என பிரகடனப்படுத்தப்பட்டது. உலகின் பல நாடுகள் இத்தினத்தை உலக கவிதை தின விழாவாக கொண்டாடி வருகின்றது.
முதலாவது உலக கவிதை தினம் 21.03.2000த்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் 2014ம் ஆண்டு மருதமுனை அல்-மதினா கல்லூரியில் இது மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தினத்தில் மாணவர் பயிற்சிப் பட்டறை, கவிதை பற்றிய உரை, போட்டி, பரிசளிப்பு என பல நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
இன்று வலம்புரி கவிதா வட்டம் இதனை செய்வது ஒரு விசேட நிகழ்வாகும்;.
உலக கவிதை தினம் பிரகடனப்படுத்தப்பட்டதன் நோக்கம் கவிதா ஆர்வலர்கள் மத்தியில் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் எனும் அம்சங்களை அறிமுகப்படுத்தவதற்கேயாகும். வலம்புரி கவிதா வட்டம் கடந்த 33 வருடங்களாக படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் எனும் நோக்கங்களைக் கொண்டு கவியரங்குகளையும் இது போன்ற விசேட நிகழ்வுகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது' என்று கூறினார்.
மேலும், உலகில் உள்ள நாடுகளின் கவிதை போக்கும் பன்மொழி கவிதை படைப்புகளின் தமிழ் மொழியிலான தாக்கமும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பல உதாரணங்களின் மூலமாக கலந்துரையாடலின் போது எடுத்துக் கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி;
இந்தியாவின் போபால் நகரில் உலக கவிஞர்கள் கூடும் விழாக்கள் நடந்துள்ளன.
ஒருமுறை நம் நாட்டின் புகழ் பூத்த கவிஞன் சில்லையூர் செல்வராஜன் கலந்து சிறப்பித்ததுடன்,
'நான் ஒரு இடதுசாரி
எப்போதும் என் இதயம்
இடதுசாரியே'
என்று சொன்ன கவிதை உலக கவிஞர்களின் பாராட்டைப் பெற்றது என்று நினைவுக் கூர்ந்தார்.
கலைவாதி கலீல் கருத்துத் தெரிவிக்கும்போது;
பாலஸ்தீன கோட்டோவிய ஓவியர் நஜீப் அல் அலியினது கோட்டோவியங்களை ஞாபகப்படுத்தினார். பாலஸ்தீன போராட்டத்தில் பலவேறு பயங்கர ஆயுதங்கள் புழங்கிய வேளையில் பாலஸ்தீனிய சிறுவர்களுக்கு 'கல்லும் ஆயுதமாக விளங்கியதை தத்ரூபமாக ஒவியர் நஜீப் அல் அலி ஹன்சல்லா என்ற பாத்திரத்தின் மூலம் தனது கோட்டோவியங்களில் சிறப்பாக சித்தரித்துள்ளார் என்றும் அவற்றை தமிழில் கவிதைகளாக வடிக்கும் பாக்கியம் தனக்கும் கிடைத்தது என்றும் தான் வெளியிட்ட நூல் குறித்தும் தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.
மேமன்கவி கலந்துரையாடலில் பங்கு கொண்டு;
'உலக கவிதைகளின் வரலாறு நீண்டது. காலனியத்தின் வழியாக ஆங்கில மொழியின் பரிச்சயம் உலக கவிதைகளைப் பற்றி தமிழ்ச் சூழலுக்கு அறியக் கிடைத்திருக்கிறது. உலகளாவிய நடந்தேறிய புரட்சிகள், போர்கள், போன்றவற்றின் தாக்கமும், மற்றும் சமூக அரசியல் பொருளாதார ரீதியான மாற்றங்கள், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக அரசியல், சமூகவியல், மொழியியல், கலை இலக்கியம் போன்ற துறைகளில் புதிய கோட்பாடுகள், தோற்றம் பெற்றன.
அக்கோட்பாடுகள் வழியாக கவிதைப் பற்றிய புதிய விளக்கங்கள், கவிதையை ஆராயும் புதிய முறைமைகள் உருவாகி உலகளாவியக் கவிதை மீதும் தாக்கம் செலுத்தின.தமிழ்க்கவிதையும் அதில் அடங்கும்' என குறிப்பிட்டார்.
சங்கர் கைலாஷ் ரஷ்யப்புரட்சிக்கு கவிதைகள் வித்திட்டன என்றார்.
என்.இஸ்ரா உரையாற்றுகையில்;
'தான் கடந்த வருடம் ஓர் ஆங்கில கவிதை தின விழாவிலே கலந்து கொண்டதாகவும், அங்கே பல கவிதைகள் விமர்சனம் செய்யப்பட்டன என்றும் நாம் எந்தத் திசையிலே பயணிக்க வேண்டும்? என்பதையும் தனது கருத்துரையில் தெரிவித்தார்.
நாச்சியாதீவு ரினோஸா கூறுகையில்;
இன்றும் கூட எமது பாடப் புத்தகங்களில் பழைய கவிதைகளே இடம்பெற்றுள்ளன. இன்று புகழ் பெற்றவர்கள் என்று கூறப்படும் எவரது கவிதைகளையும் காணவில்லையே! என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் வாசிக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும் என்று தனது கருத்தினைப் பதிவு செய்தார் கலையழகி வரதராணி.
இக் கருத்தரங்கு இன்னும் சரியான வழியிலே செயல்படுத்தப்பட்டால் ஒழிய இதன் நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட ஈழகணேஷ் உலக கவிஞர்கள் பலரைத் தொட்டுக் காட்டினார்.
'உலக கவிதைகள்' என்ற தமிழ்த் தொகுப்பு நமது கவிஞர்களால் வாசிக்கப்பட வேண்டும் என்றார்.
பஸ்லி ஹமீத் ஹைக்கூ கவிதைகளின் நவீன போக்கு பற்றி குறிப்பிட்டார்.
அலி அக்பா உரையாற்றியபோது;
'இன்று ஒரு ஆழமான தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருக்கிறோம். இது இன்றுடன் முடிந்து போகும் விடயமல்ல இன்னும் இன்னும் ஆராயப்பட வேண்டிய விடயம் என்று குறிப்பிட்டதோடு, தமிழ்ப் புலவர்கள் அன்றே உலகத் தரத்தில் கவிதை பாடியிருக்கிறார்கள்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிய கவிதை வரிகளுக்கு இணையாக வேறு மொழி கவிதைகள் இருக்குமா? என்பது சந்தேகமே. ஏனெனில் இப்புலவன் இக்கவிதையை மிகவும் நுட்பத்துடன் பின்னியுள்ளான். ஒரு கேள்வி கேட்டு அதையே பதிலாகவும் சொல்லியுள்ளான்.
'யாது உம் ஊரே ?' 'யாவர் உம் கேளிர்?'
என்று கேள்வி கேட்டு அதையே பதிலாக சொல்லியிருக்கிறான் இப்படி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார்.
கவிஞர் பொத்துவில் அஸ்மின், இர்ஷாத் ஏ. காதர், கவிஞர் ஏ.ஜே.ஏம் நிலாம், சமூகஜோதி ரபீக், கண்ணன், மாத்தறை பிஸ்ருல் பாரிஹ், வெளிமடை ஜஹாங்கீர், லோகநாதன் போன்ற பலர் நிகழ்வைச் சிறப்பித்தனர்.
.jpg)