இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பிலான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரகசிய தடுப்பு முகாம்கள் காணப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான எந்தவிதமான தடுப்பு முகாம்கள் இயங்கவில்லை என பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது எவ்விதமான இரகசிய தடுப்பு முகாம்களும் இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் உயிரிழந்து விட்டதாகவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவோ கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பின் தெஹிவளை பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடற்படை அதிகாரிகள் சிலர் வெள்ளை வானில் இளைஞர்களை கடத்தி சென்றுள்ளதாகவும் இவ்வாறு கடத்தப்பட்ட சில இளைஞர்கள் திருகோணமலையின் கோதபாய என்னும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த முகாமில் உண்மையில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களா அல்லது இளைஞர்களுக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது பற்றி விசாரணை செய்து ஏப்ரல் மாதம் 23ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
