எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை இலங்கை இரசிகர்கள் அணியினருக்கும், பாக்கிஸ்தான் இரசிகர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ ரீ-20 கடினபந்து “கிரிக்கெட் சமர்” போட்டியில் கல்முனை பாக்கிஸ்தான் இரசிகர்கள் அணியினர் 2 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டினர்.
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் கல்முனை பிரதேச முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி கல்முனை பிரதேசத்தில் கடந்த 12 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இடம்பெற்றதுடன், மிகச் சிறப்பாக இப்போட்டி ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.
இக்கிரிக்கெட் சமரில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய பாக்கிஸ்தான் இரசிகர்கள் அணியினர் முதலில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 146 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை இரசிகர்கள் அணி சார்பாக எம். றிஸாட் 4 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களைக் கொடுத்து, 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை இரசிகர்கள் அணியினரின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்தாலும் அவ்வணியினர் இறுதி பந்து வரை போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. 20 வது ஓவரின் இறுதி பந்துவீச்சில் 4 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இலங்கை இரசிகர்கள் அணியினர் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். இதனடிப்படையில் 2 மேலதிக ஓட்டங்களால் பாக்கிஸ்தான் இரசிகர்கள் அணியினர் அபார வெற்றியீட்டி இரசிகர்களுக்கு மாபெரும் இரசனை விருந்தளித்தனர்.
இப்போட்டி இறுதிவரை ஒரு சர்வதேச போட்டி போன்று நடைபெற்றதுடன் வெற்றி தோல்வி இலக்கு யார் பக்கம் என்ற கணிப்பை எடுக்க முடியாமல் மிகவும் அபாரமாக நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லுாரியின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா அவர்களும் கௌரவ அதிதியாக மீரா றைஸ் உரிமையாளர் எம்.எம். ஜமால்டீன் அவர்களும், விசேட அதிதிகளாக வர்த்தகர்களான முஹம்மட் ஜவ்பர், எம்.ஐ.ஏ.கரீம், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம். மனாப், உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் உட்பட விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளும், வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கௌரவ அதிதி மீரா றைஸ் உரிமையாளர் எம்.எம். ஜமால்டீன் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் மற்றும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இரு இலங்கை இரசிகர்கள் அணி வீரர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா பணப்பரிசு வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் நினைவுப்பரிசு, வீரர்களுக்கான நினைவுப்பதக்கம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)