ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு 10 அம்சங்கள் அடங்கிய ஒழுக்கக் கோவை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஒழுக்கக் கோவை சமர்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் இன்று (04) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மாற்றம் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானது மாத்திரமே மாற்றம் என்றும் ஆனால் அவரது வெற்றியை ஐ.தே.கவினர் தங்களது வெற்றியாக கருதி வருவதாகவும் பாராளுமன்றத்திலும் அவர்களது அதிகார அளவு கூடியுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மற்றும் அரசியல் யாப்பு மாற்றம் என்பவற்றை கருத்திற் கொண்டே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் 50 நாள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அபிவிருத்திகள் நிறுத்தப்படக் கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் தற்போது அதிகார வரம்பற்ற சபை ஒன்று செயற்பட்டு வருவதாகவும் மக்கள் வாக்களித்தது மைத்திரிபாலவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு விசாரணை நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எப்படி உள்நாட்டு விசாரணை நடத்துவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்தர கட்சி தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் முடக்கப்படுவதாகவும் அதற்கு அமைச்சரவை முழு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கண்டியில் நடைபெறும் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டத்திற்கு செல்பவர்கள் குறித்து பின்னர் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
