புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த தமிழ் மக்கள் பாரிய நியாயமான பங்களிப்பு செய்துள்ள போதும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்வு குறித்து அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகளை சந்தித்தார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்களநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா சார்பில் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தேர்தலுக்குப் பின் இலங்கையின் நிலைமை, புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அத தெரணவிடம் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பல நல்ல விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள போதும் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க கூடிய கவனம் செலுத்தப்படவில்லை என நிஷா பிஸ்வாலிடம் எடுத்துரைத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்றம் உள்ளிட்ட வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வுக்கு உரிய ஆவணங்களை புதிய அரசாங்கத்திடம் சமர்பித்துள்ள போதும் அரசாங்கம் அதுகுறித்து விரைந்து செயற்படவில்லை என சுரேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது கோரிக்கைகள் சரி என்று ஏற்றுக் கொண்ட பிஸ்வால் அரசாங்கத்திற்கு இது தொடர்பில் வலியுறுத்துவதாக உறுதி அளித்துள்ளார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
