அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இடித்துரைத்து சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்னோடியான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு என ஒப்புக்கொள்ள வேண்டுமென வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் சிரேஸ்ட முக்கியஸ்தர் உப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் இனப்படுகொலைப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள தமிழ்க் கூட்டமைப்பு அந்த மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியமை இனச் சுத்திகரிப்பு என்ற தீர்மானத்தை வட மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் - முஸ்லிம் உறவை வலுவூட்டவும் தமிழர் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கும் இந்தத் தீர்மானம் பெரிதும் வழிவகுக்கும் என அமீன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இனப்படுகொலைத் தீர்மானத்துக்கு வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியமையை அவர் நினைவுபடுத்தியுள்ளார். சுமார் கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் துன்பப்படும் வட மாகாண முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்க வடமாகாண சபை ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நல்குவது காலத்தின் தேவையாகவுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளாகிய உண்மையை அறிதல், நீதி கிடைத்தல், நிவாரணம் கிடைத்தல் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் முன்னாள் நீதியரசரும் வடக்கின் முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் பணியாற்றுவார் என வடபுல முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து நிற்பதாக அவர் தெரிவித்தார்.