ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட செம்மண்ணோடை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாய் சேய் சிகிச்சை நிலையத்தின் கட்டட வேலைகளை தொடரவிடமால் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாக கோரி செம்மண்ணோடை மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய யூனியன் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் யுனிசெப் நிறுவனத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலத்தின் மேற்பார்வையின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடம் அமைக்கப்படும் இடத்துக்கு அருகில் செம்மண்ணோடை பிரதேசத்தின் பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளதாகவும், இக்கட்டடத்தை அமைப்பதால் மைதானத்தின் அளவு குறைந்து விடும் என அப்பகுதி விளையாட்டு கழகம் ஒன்று தெரிவித்ததையடுத்து விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்து தரப்படும் என பிரதேச செயலக அதிகாரிகளால் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மைதானத்தை புனரமைப்புச் செய்வதற்கான பொருட்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டமையால் மைதானத்தை சற்று தாமதாக புனரமைப்பு செய்து தருவதாக கூறியதையடுத்து பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகமொன்று தாய் சேய் சிகிச்சை நிலையத்தை அமைக்கும் செயற்பாட்டுக்கு தொடர்ந்து தடங்கள்களை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இக்கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் பிரதிநிதியாக இடத்திற்கு வருகை தந்த உதவி திட்டப் பணிப்பாளர், குறித்த தாய் சேய் நிலையம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்படுமெனவும், அத்துடன் மைதானமும் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டனர்.
இதன்போது தாய் சேய் சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கு தடையேற்படுத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)