முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருவரும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் தினமன்று இரவு இராணுவச் சதி முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கைக்குக் காத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீர செய்திருக்கும் முறைப்பாட்டுக்கு அமையவே இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருவருக்குப் புறம்பாக முன்னைய ஆட்சியின் போது பிரதம நீதியரசராக அமர்த்தப்பட்டிருந்த மொஹான் பீரிஸுக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ, கடற்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப் பெற்றவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
