உலகக்கிண்ணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணி ஒரு சிறந்த அணி கிடையாது என்று அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
உலகக்கிண்ணத் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இலங்கை படுதோல்வியடைந்தது. தொடக்க போட்டியிலே தோல்வியை சந்தித்ததால் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.
இந்நிலையில் உலகக்கிண்ண இலங்கை அணியில் வீரர்களின் தெரிவு பற்றி முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், திறமையான வீரர்கள் அணிக்கு வெளியில் இருக்கும் போது எவ்வாறு இது போன்ற திறமையற்ற அணிவொன்றை தெரிவு குழுவினரால் தெரிவு செய்ய முடிந்தது.
அணியில் மாற்றங்கயை செய்யும் போது முதலில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தற்போதைய இலங்கை அணியில் நிறைய வீரர்கள் மன அழுத்தத்துடன் இருக்கின்றனர்.
சந்திமால், திரிமான்னே, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை அணி எவ்வாறு கிண்ணத்தை வெல்லும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அணியின் மூத்த வீரர்களான மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா மற்றும் டில்ஷான் ஆகியோருக்கு இது இறுதி உலகக்கிண்ணம் என்பதால் வெற்றியுடன் அவர்களை வழியனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
