பல்லின மக்கள் வாழும் நாவலப்பிடியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை தழுவ பொது பல சேனா இயக்கமே காரணம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அலுத்கம பேருவளை சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை சில ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் ஊக்கப்படுத்தியமை சிறுபான்மை மக்களின் வாக்குகள் மஹிந்தவிற்கு கிடைக்காமல் போக பிரதான ஏதுவாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடாது எனவும் ஐக்கிய மக்கள் தந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால தேர்தல் வெற்றியானது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் கைகளில் தங்கியுள்ளது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
