கிழக்கின் முதலமைச்சர் ஸ்ரீ.ல.மு.கா. சம்மாந்துறை மன்சூரே..........!

72மணித்தியாலயங்களுக்குள் கிழக்கின் முதலமைச்சர் யார் என்று அறிவிப்பேன் ஸ்ரீ.மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் நேற்று முன் தினம் மருதமுனையில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கூறியிருந்தார். அதற்கமைவாக இன்று இரவுக்குள் அல்லது நாளை முதலமைச்சர் யார் என்பது பற்றி அறிவிக்கப்படும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்களுக்குள் யாருக்கு வழங்குவது எனும் வினாவுக்கு பிரதேச வாதம் பேசியோ அல்லது தனி மனிதர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலோ தீர்மானிக்காமல் இப்பதவியிநூடாக முழு மாகாணமும் உச்ச பயனை அடையக்கூடிய வகையிலும் எமது கட்சி மற்றும் தலைமைத்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடக்கூடாத வகையிலும் நியமிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மத்திய அமைச்சரவையில் உறுப்புரிமை கொண்ட அமைச்சரவை அந்தஸ்துடைய இம்முதலமைச்சர் பதவியானது பொருத்தமற்ற ஒருவரிடம் ஒப்படைக்கப் படுமாக இருந்தால் அது பல்வேறு விபரீத விளைவுகளை தோற்றுவிக்க வழி வகுக்கலாம்.

கடந்த காலங்களில் தலைமைத்துவத்துக்கு ஈடாக அமைச்சுப்பதவி வகித்தவர்களால் தலைமைத்துவம் எதிர் கொண்ட அச்சுறுத்தல்களும் சவால்களும் எம்மால் இலகுவில் மறக்க முடியாதவைகளாகும்.அவைகள் ஈற்றில் எமது கட்சியை கூறு போடவும் தவறவில்லை.

அவ்வாறே அண்மைக்காலத்தில் அமைச்சுப் பதவி வகித்து வந்த கட்சியின் தவிசாளரின் மிலேச்சத்தனமானதும் தான்தோன்றித் தனமானதுமான நடவடிக்கைகளினால் எமது கட்சியின் பேரம் பேசும் சக்தி கேள்விக்குறியாக்கப்பட்டமையையும் அதனால் எமது தலைமைத்துவம் நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பங்களும் வரலாற்றில் பதியப்பட்ட விடயங்களாகும்.

இவ்வாறான நிலைமை மேலும் உருவாகாத வகையிலேயே இம்முதலமைச்சர் நியமனம் கையாளப்பட வேண்டும்.அதாவது தலைமைத்துவத்துக்கு முழுமையாக கட்டுப்பட்டு தலைமைத்துவத்துக்கு எச்சந்தர்ப்பத்திலும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் அவரோடு ஒத்திசைந்து நடக்கக்கூடிய ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.அதுவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்துக்கே அது வழங்கப்பட வேண்டும்.இதனை முழுமாகாணத்திலுமுள்ள போராளிகளும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறு நியமிக்கப் படுபவர் மேலே சொன்ன தகுதிகளுக்கு அப்பால் பின்வரும் சிறப்புத் தகுதிகளைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.
1இலகுவாக சந்திக்க கூடியவராக இருத்தல் வேண்டும்.

2 சகல பிரதேசங்களிலுமுள்ள கட்சிப் போராளிகளையும் முக்கியஸ்தர்களையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

3சகல இன மக்களையும் அனுசரித்து நடக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

4.ஓரளவேனும் அனுபவமுடயவராக இருத்தல் வேண்டும்.

5.பிரச்சினைகள் மற்றும் சவால்கள் வருகின்றபோது அவைகளை துணிச்சலுடனும் நிதானமாகவும் எதிர்கொள்ளக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

இவ்வாறான தகுதிகள் அடங்கலாக இன்னோரென்ன தகுதிகளையும் கொண்ட ஒருவர்தான் மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களாகும்.

இவர்

1அம்பாரை மாவட்டத்திலுள்ள உறுப்பினர்களுள் வயதில் மூத்தவராகும்.

2கட்சியின் மிகவும் சிரேஷ்ட உறுப்பினராகும்.

3தலைவர் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக இருக்கும்போது அவரின் மக்கள் தொடர்பதிகாரியாக நன்கு வருட அனுபவம் உள்ளடங்கலாக சம்மான்துரை பிரதேச சபை தவிசாளராக ஐந்து வருட அனுபவம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த இரண்டு வருட அனுபவம் இவருக்குண்டு.

4சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களுக்கும் அப்பால் தமிழ் சிங்கள மக்கள் மட்டுமன்றி மாகாண நிர்வாக மட்டத்திலும் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.

5மும் மொழிகளிலும் சிறப்பாகக் கடமையாற்றக் கூடிய ஒருவர்.

மேலும் இவரை நியமிப்பதன் மூலம் சம்மாந்துறைத் தொகுதிக்கு எம்.பி இல்லாத குறையையும் நிவர்த்திக்க முடியும்.

இவ்வாறு சகல தகுதிகளையும் கொண்டிருக்கும் மன்சூர் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத் தளங்களில் பல்வேறு பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவது வேதனைக்குரியதும் கண்டிக்கத் தக்கதுமாகும்.அவர் தனது ராஜினாமாக் கடிதத்தையும் வாகனத்தையும் நேர காலத்தோடு அனுப்பி வைத்த போதும் மோசமாக விமர்சிக்கப் படுகின்றார்.இவ் விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கத் தவறியமையால் எழுந்த பிரச்சினையாகும்.எப்போதுமே தன்னை விளம்பரப்படுத்துவதில் இருக்கும் அவரது அசமந்தப் போக்கும் அவருக்கே உரிய அவரது இயல்பான சுபாவமும் இவ்வாறான விமர்சனத்துக்கு வழி வகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதும் ஒரே ஒரு நாள் சொந்த வேலைக்காக கொழும்பு சென்றிருந்த சமயம் மன்சூர் தலைமறைவாகி விட்டார் என்ற பிரச்சாரத்தையும் மேற்கொள்ள தவறவில்லை.

இந்த பிரச்சாரம் எல்லாம் எமது கட்சிப் போராளிகளாலோ அல்லது எதிரிகளாலோ உருவாக்கப்பட்டவைகள் அல்ல.மாறாக இன்று ஏற்பட்டிருக்கின்ற சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள விரும்பும் சுயநல அரசியல் வாதிகளான எம்மவர் சிலரால் பரப்பப்பட்ட வதந்திகளாகும்.இது எமது தலைமைக்கு விளங்காத புதிருமல்ல ரகஷ்யமும் அல்ல.

எது எவ்வாறாக இருந்தாலும் கடந்த 29 வருடங்களாக இந்தக் கட்சிக்காக சகல வழிகளிலும் தியாகம் செய்து கொண்டு வரும் ,எச் சந்தர்ப்பத்திலும் இதுவரை கட்சி மாறாத,கட்சிக்கும் தலைமைக்கும் இதுவரை விசுவாசமாக இருந்து வரும்,எம்.பி யே இல்லாத ஊரை பிரதிநிதித்துவப் படுத்தும் சம்மாந்துறை மன்சூர் அவர்களுக்கு முதலமைச்சுப் பதவி வழங்கப்படுவதே சாலப் பொருத்தமானதாகும்.

பிரதேச சபை உறுப்பினர் ரனீஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -