ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமர்வு அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இலங்கைக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் நல்லாட்சிக்கான முன்னேற்பாடுகளால் இலங்கைக்கு ஜெனீவாவில் அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது.
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால் முன்னாள் போர்வலயமான வடக்கு பிராந்தியத்திற்கும் சென்று பலதரப்பட்டவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஐநாவின் நிபுணர் குழு நடத்திய விசாரணைகளின் அறிக்கை அடுத்தமாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெர்ரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
