கலாநிதி அஷ் ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ்-
தற்போதைய நிலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு முஸ்லிம் உறுப்பினரிடம் கையளிப்பதே தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும்.
இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன்வைப்பதற்கும், தேசிய பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்வதற்காகவுமே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இலங்கை உடன்படிக்கை அதன் மூலமே சாத்தியமானது. தற்பொழுது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டணி இன்னும் சற்று நிதானமாகவும் பொறுப்பாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பின் மீதான 13 ஆவது திருத்தப் பிரேரணை அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இணைந்த வட கிழக்குடன் மாகாண சபை வழந்கப்பட்ட பொழுது அதனை புலிகள் நிராகரித்தமையும், இந்தியாவை பகைத்துக் கொண்டு இந்தியப் படைகளுடன் போரிட்டமையும், ராஜீவ் காந்தியை கொலை செய்ததுவும், முஸ்லிம்களை வடகிழக்கில் இனச் சுத்திகரிப்பு செய்தமையும் விடுதலைப்புலிகள் தற்கொலைக்குச் சமமாக செய்து கொண்ட மிகப் பெரிய அரசியல் மற்றும் வரலாற்றுத் தவறுகளாகும்.
விடுதலைப்புலிகள் நிராகரித்த மாகாண சபையினை பெற்றுக்கொண்ட ஈ பி ஆர் எல் எப். வரதராஜப்பெருமாள் தமிழ் தேசிய ஆமியை தோற்றுவித்து சகோதர முஸ்லிம் சமூகத்திற்கு இழைத்த கொடுமைகள் ஒரு புறமிருக்க ஈழப் பிரகடனம் செய்தமை தென்னிலங்கையில் தமிழர்களின் போராட்டம் குறித்த சந்தேகங்களை ஆழமாக விதைத்திருக்கிறது.
தென்னிலங்கை பேரின அரசியல் தலைமைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் விடுதலைப் புலிகளும், தமிழ் தலைமைகளும் இனப்பிரச்சினை விவகாரத்தை கோரா யுத்தமாக மாற்றுவதில் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள்.
தற்போதைய நிலைமையில் அதிகாரப்பரவலாக்கல் குறித்த அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலைமையில் முஸ்லிம்களது நிலைமை குறித்த தெளிவில்லாத நிலைமையில் முதலமைச்சர் பதவியை தமிழர் கூட்டணி கேட்பது நியாயமில்லை அரசியல் ரீதியாக அவர்களுக்கும் ஆரோக்கியமானதாய் இல்லை.
இரண்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இணங்குகின்ற பட்சத்தில் வடகிழக்கை ஒரு மாகாணமாக பிரகடனப்படுத்துகின்ற சட்ட ஏற்பாடு இருக்கின்ற நிலைமையில் அவை முஸ்லிம்கள் மத்தியில் கடந்த கால அச்சங்களை ஏற்படுத்தும். அதேவேளை தென்னிலங்கையில் தேசிய பாதுக்காப்பு குறித்த அச்சங்களை தோற்றுவிக்கும்.
சிங்கள மக்கள் தேசிய பாதுகாப்பு குறித்து பீதி கொள்ளாமல் இருக்கவும் முஸ்லிம் மக்கள் தமக்கான ஒரு தனி அலகை கோரும் நிலை ஏற்படாதிருக்கவும் அவ்வாறான ஒரு நிலையை தோற்றுவித்து பேரின மற்றும் பிறநாட்டு சக்திகள் எரிகிற வீட்டில் குளிர்காயாமல் இருப்பதற்காகவும் மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களிடமே (முஸ்லிம்கள் உற்பட )அதிகாரங்கள் இருக்க வேண்டும் எனவும் சிந்திப்பதாயின் கடந்தகால தவறுகளை தமிழர் தேசிய கூட்டணி ஆத்திர அவசரத்தில் செய்து விடக் கூடாது.
பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலைமையில் அதை மைத்ரியிடமோ, ரணிலிடமோ கேட்டு நிற்பது தமிழ் மக்களின் நீண்ட கால அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்காது. இந்தியாவுடனும் சர்வதேச சக்திகளுடனும் நல்லுறவுகளை கட்டி எழுப்பி தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியமான, சமயோசிதமான நகர்வுகளை ஒருபுறம் வைத்து விட்டு தென்னிலங்கை பேரின சக்திகளை தூண்டி விட்டு நிலைமைகளை தமிழ் தேசியக் கூட்டணி ஆத்திர அவசரத்தில் கெடுத்துவிடக் கூடாது.
முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாயின் சகல தரப்புக்களையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரவும் ஒரு முதலமைச்சரை சிபாரிசு செய்யவும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு சிவில் தலைமையால் முடியும் என நான் நினைக்கிறேன்.
.jpg)