இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)-
மஹிந்த அரசில் முதலமைச்சர் பதவியை வெறுத்த மு.கா. மைத்திரி ஆட்சியில் அதனைக் கோருவது ஏன்? என்று பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த அரசில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த த.தே.கூ. மைத்ரி அரசில் விடாப்பிடியாய் நிற்பதேன்?. கிழக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது, மனித நேயத்துடன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இப்போது, ஏன் முன்வரக்கூடாது?.
தற்போதைய முதலமைச்சரை எஞ்சிய மூன்று மாதத்திற்கும் பதவியிருக்க ஏன் அனுமதிக்கக் கூடாது?. தொடர்ந்து, ஒப்பந்தப்படி மீதி இரண்டரை வருடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது?.
மத்தியில் ஆட்சி மாற்றம், ஆட்சியில் இருந்தவர் நடாத்திய அவசரத் தேர்தலால் ஏற்பட்டது. கிழக்கில் ஆட்சியில் இருப்பவர், அவசரப்பட வேண்டாம் என எஞ்சிய காலத்தை நிறைவு செய்ய கால அவகாசம் கோருகின்றார்.
மாற்றத்தை நோக்கிய மைத்ரி யுகத்தில், கிழக்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம் என்று ஏற்க முடிந்தாலும், சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்பிருந்த கொள்கை மாற்றத்தைத்தான் நியாயம் என்று ஏற்க முடியாதுள்ளது.
கிழக்கில், மத்தியில் ஏற்பட்டதுபோல், பாரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழுபேரும் ஆட்சியாளருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு, பொது வேட்பாளருக்கான ஆதரவை வழங்க முன்வந்தபோதும், வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்திருந்தது.
அத்தோடு, முன்னதாக தனித்தியங்கத் தீர்மானித்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பிரியந்த பத்திரன மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சம்சுல் ஆரிபீன் ஆகியோரும் கட்சிதாவியிருந்தனர்.
இந்நிலையில்தான், கிழக்கிலும் ஆட்சி மாற்றம் கோரப்பட்டு, வரலாற்றுக் சாதணையாக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டாவது பெரும்பான்மையாக வாழும் தமிழ் சமூகம், வடக்கில் முதன்மை பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதுடன், அங்கு ஆட்சி அமைத்து, வடக்கை நிர்வகித்து வருகின்றது.
அவ்வாறே, நாட்டில் மூன்றாவது பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம், கிழக்கில் இரண்டாவது பெரும்பான்மையாக வாழ்ந்து, இங்கு அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து, கிழக்கை நிர்வகித்து வருகின்றது.
இந்நிலையில், கிழக்கின் ஆட்சியை தமிழ் சமூகம் கோருகின்றபோதும், முஸ்லிம் சமூகத்திற்கு கிழக்கைத் தவிர வேறெங்கும் ஆட்சியைக் கோர முடியாது. முஸ்லிம் சமூகம் ஆட்சியைக் கோருவதற்கான அதிக வாய்ப்பு கிழக்கில் மாத்திரமே உள்ளது. அதனால்தான் கிழக்கின் ஆட்சியை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து கோரி வருகின்றது.
கிழக்கில், மொத்த சனத் தொகையில், 569,738 ஆக, இரண்டாவதாக உள்ள முஸ்லிம்கள், திருகோணமலை மாவட்ட சனத் தொகையில் 153,031ஆக இரண்டாவதாவும், மட்டக்களப்பு மாவட்ட சனத் தொகையில், 133,984ஆக இரண்டாவதாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், அம்பாறை மாவட்ட சனத் தொகையில் 282,723ஆக முதலாவதாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், மாகாண உறுப்பினர் தொகையிலும் 15ஆக முதலிடத்தில் உள்ளனர். சபையில் அங்கத்துவம் பெறும் முஸ்லிம் கட்சிகளின் எண்ணிக்கையிலும் 3ஆக முதலிடம் பெறுகின்றனர்.
தற்போதைய நிலையில் ஐந்து கட்சிகள் அங்கத்துவம் பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி தமிழ் மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் மைத்திரி பக்கம் தாவிய ஜாதிக கெல உறுமய ஆகிய கட்சிகள் அங்கத்துவம் பெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தேசிய காங்கிரஸில் இருந்து கட்சி தாவியவர் உட்பட 08 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் 04 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 03 உறுப்பினர்களும் உள்ளனர்.
மத்திய அரசில் தர விரும்பும் அமைச்சர் பதவிகளை ஏற்க மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மாகாணத்தில் தர மறுக்கும் முதலமைச்சர் பதவியை ஏற்ற விரும்புவதன் இரகசியம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த நிலையில், மற்றைய சமூகத்தவர்களின் உரிமைகள், சலுகைகள் என்பவற்றை மதித்துப் பேணுவதும் அவர்களது தார்மீகப் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு சிவில் சமூகம், அந்த சமூகத்தின் மீது தார்மீகப் பொறுப்பாக உள்ள மதித்துப் பேணவேண்டிய உரிமைகளும், சலுகைகளும் எவை எனத் தெளிவாகச் சொன்னால் செயற்படுகையில் கவனத்திற்கொள்ள வசதியாக இருக்குமல்லவா?.
ஒரு மாகாணத்திற்குள் விட்டுக் கொடுப்பை மேற்கொள்ளாத சூழலில், எவ்வாறு தேசிய இனப்பிரச்சினை தீர்வில் இணக்கப்பாட்டைக் காண முடியும் என கேள்வி எழுப்பியுள்ள இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்திடம், அதே கேள்வியை அந்த சமூகம் கேட்டால் என்ன பதில் சொல்லாம்.
இதற்கு உடனடி பரிகாரம் சபை உறுப்பினர்கள் தமக்கு விரும்பிய ஒருவரை, இன, மத பேதமின்றி தெரிவு செய்வதே. அவசியம் ஏற்படின் இரகசிய வாக்கெடுப்ப முறைமையையும் கையாளலாம். இது கிழக்கு முதல்வர் பதவி பிரச்சினைக்கு ஆனந்த சங்கரி கூறும் ஆலோசனை. சிந்திப்போம். செயற்படுவோம்.
