முதலமைச்சருக்கான பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோருமாயின் வழங்குவதற்கு தயார்-உதுமாலெப்பை

சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோருமாயின் அதனை வழங்கி தற்போது தொய்வு நிலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஒரு ஸ்திரமான சபையாகக் கொண்டு நடாத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் முழு ஆதரவினையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளனர் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் தற்கால நடவடிக்கை தொடர்பில் கேட்ட போதே ; இன்று வியாழக்கிழம(29) இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;

கிழக்குமாகாண சபையானது கடந்த 2008 ஆண்டுமுதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் 22 உறுப்பினர்களைக் கொண்டமைந்ததாக சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

இதேவேளை 2015 ஆண்டின் கிழக்கு மாகாண சபைக்கான வரவு லெவுத்திட்டம் முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவிருந்த இறுதி நேரத்தில் மு.கா. சேர்ந்த 07 உறுப்பினர்களும் முதலமைச்சருக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இறுதி நேரத்தில் மு.கா. உறுப்பினர்களினால் ஆதரவளிப்பது தொடர்பில் இரு வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது.

இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையினால் சபை நடவடிக்கைகளை ஜனவரி 12ம் திகதி வரை ஒத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஜனவரி 12ம் திகதி சபை மீண்டும் கூடிய போது வரவு செலவுத்திட்டதிற்கான ஆதரவு வழங்குமாறு கோரியது. இதனையடுத்து கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மைப் பலத்தை நாங்கள் கொண்டுள்ளதாகவும் அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு, மு.கா. ஐக்கிய தேசிய கட்சி ஆகிய உறுப்பினர்களைக் கொண்டு தாங்கள் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதால் எதிர்வரும் 20ம் திகதி வரை கால அவகாசத்தை சபை கூடுவதற்கு முன்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தெரிவித்தனர். இதனால் சபை நடவடிக்கைய பெப்ரவரி 10ம் திகதி வரை பிற்போடப்பட்டது.

ஆக டிசம்பர் 02ம் திகதி முதல் பெப்ரவரி 10ம் திகதி வரையில் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமானதொருநிலையை அடைந்திருப்பது துரதிஸ்டமானதொருநிலையாகும்.

வருட இறுதிப்பகுதியில் முழு மாகாணத்திற்குமான வரவு செலவுத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள், நிருவாக தொய்வு நிலைகள் போன்றன ஸ்தம்பிதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். அரச ஊழியிர்களின் சம்பளத்தினைக் கூட வழங்குவதற்கு மாகாண சபையால் முடியாமல் போனது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில் 08மாகாணங்களின் முதலமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அண்மையில் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன் போது ஜனாதிபதி உரையாற்றுகையில், எந்தவொரு மாகாண சபையையும் கவிழ்ப்பதற்கோ, ஆட்சி மாற்றம் செய்வதற்கோ, தலையிடுவதற்கோ ஜனாதிபதி என்றரீதியிலும், தனிப்பட்டரீதியிலும் நான் விரும்பவில்லை எனத்தெரிவித்தார்.

இதற்பிற்பாடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டம் எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடிசில்வா தலைமையில் கிழக்கு மாகாண சபையின் ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதன் போது கிழக்கு மாகாண சபையின் தற்போதய நிலை, அரசியில் நிலபரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் 2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகண சபையின் தேர்தலின் பின்னர் ஐ.ம.சு.கூட்டமைப்பு மு.கா. செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபையின் பிந்திய இரண்டரை வருடத்திற்கான முதலமைச்சர் பதவியை மு.காங்கிரஸ் கோருமாயின் அதனை வழங்குவதற்கும் சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச்சென்று ஆட்சியமைப்பதற்கும் இதன் போது இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -