ஊவா மாகாண சபையில் இவ்வார இறுதிக்குள் எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். இந்நிலையில் வார இறுதியில் சத்தியக் கடதாசிகளை ஒன்றிணைத்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க அனுமதி கோருவோம். அவர் அனுமதி வழங்காவிடின் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஊவா மாகாண சபை அமர்வை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் 50 வீதத்தினால் குறைவடைந்துள்ளமையின் காரணமாக நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக குறைக்கவேண்டும். மின்சாரக் கட்டணத்தையும் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளின் விலையையும் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்
ஊவா மாகாண சபையில் சில தினங்களில் பாரிய மாற்றம் ஏற்படும். நாங்கள் விரைவில் ஊவா மாகாண சபையில் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஊவா மாகாண சபையில் ஆளும் கட்சிக்கு 18 பேர் உள்ளனர். எமது பக்கம் இன்னும் மூன்று பேர் வந்தால் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். எமது கொள்கை மற்றும் வேலைத்திட்டங்களை பார்த்து மாகாண உறுப்பினர்கள் எமது பக்கம் வருகின்றனர். அரசாங்கம் நிதியை பயன்படுத்தி அவர்களை தடுக்க முயற்சிக்கின்றது. ஆனால் அவ்வாறு நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றவர்களை தடுக்க முடியாது.
பெரும்பான்மையை நிருபிக்க முடியும்
ஊவா மாகாண சபை உறுப்பினர்களுடன் நாங்கள் பேச்சு நடத்திவருகின்றோம். விரைவில் எம்மால் பெரும்பான்மையை ஊவா மாகாண சபையில் நிரூபிக்க முடியும். பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பதாலேயே ஊவா மாகாண சபையை ஒத்திவைத்துள்ளனர். அதாவது குளிர் என்று கூறி மாகாண சபை அமர்வை ஒத்தி வைத்துள்ளனர். இதன்மூலம் மக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்று தெரியவருகின்றது.
நீதிமன்றம் செல்வோம்
ஊவா மாகாண சபையில் வார இறுதியில் எம்மால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியும். நாங்கள் மாகாண உறுப்பினர்களுடன் பேச்சு நடத்திவருகின்றோம். ஊவா மாகாண சபையில் இவ்வார இறுதிக்குள் எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். இந்நிலையில் வார இறுதியில் சத்தியக் கடதாசிகளை ஒன்றிணைத்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க அனுமதி கோருவோம். அவர் அனுமதி வழங்காவிடின் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஊவா மாகாண சபை அமர்வை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவோம் .
இதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு நடந்துள்ளது. விரைவில் மாற்றம் ஏற்படும். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலும் மைத்திரிபால சிறிசேன சார்பிலும் நாங்கள் பேச்சு நடத்திவருகின்றோம்.
குறுந்தகவல் அனுப்பினோம்
இதேவேளை ஊவா மாகாண முதலமைச்சர் தொடர்ந்து சபை அமர்வை நடத்துவதை ஒத்திவைத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்ய முடியாது. உறுப்பினர்களை ஒன்றிணைத்து பெரும்பான்மை பலம் இருப்பதாக முதலமைச்சர் செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அந்த செய்தியாளர் மாநாட்டில் இருந்த உறுப்பினர்கள் எமக்கு குறுந்தகவல் மூலம் எப்போது வரவேண்டும் என்று கேட்டு செய்தி அனுப்பிக்கொண்டிருந்தனர். எனவே நாங்கள் ஊவா மாகாண சபையில் வார இறுதியில் பெரும்பான்மையை காட்டுவோம்.
சூடு அதிகம் என அமர்வுகளை ஒத்திவைக்கலாம்
இன்னும் சில மாகாண சபைகளில் சூடு அதிகம் என்று அமர்வுகளை அரசாங்கம் ஒத்திவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுவருகின்றது. நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மைத்திரிபால சிறிசேன பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர். மாகாண சபை உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் பெறுமதியானவர்களாக உள்ளனர்.
பைல்கள் எங்கே?
பைல் கதைகளை கூறுகின்றனர். அதாவது ஆளும் கட்சியிலிருந்து இந்தப் பக்கம் வர திட்டமிட்டு தற்போது வராமல் இருக்கின்றவர்களுக்கு சிலவேளை பைல் இருக்கலாம். ஆனால் தைரியத்துடன் இந்தப் பககம் வந்தவர்களுக்கு பைல் இல்லை. மேலும் பைல்கள் இருந்தால் அவற்றை வெளியில் போடுங்கள். எனினும் நாங்கள் எதிர்காலத்தில் தொகுதி தொகுதியாக சென்று அவர்களின் பைல்களை வெளியில் போட நடவடிக்கை எடுப்போம்.
ஜனாதிபதி தவறுதலாக பைல் கதையை கூறிவிட்டதாக அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கூறுகின்றவர்களுக்கு பைல்கள் இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம். அதனால்தான் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
எரிபொருள் விலையை குறையுங்கள்
இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை என்றுமில்லாதவாறு குறைவடைந்துள்ளது. 115 டொலராக இருந்த ஒரு பீப்பாய் தற்போது 60 டொலர்களாக குறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு பாரியளவில் எரிபொருளின் விலை குறைவடைந்தும் ஏன் அரசாங்கம் உள்நாட்டில் எரிபொருளின் விலையை குறைக்காமல் உள்ளது என்று கேட்கின்றோம். எனவே உடனடியாக எரிபொருளின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம். இந்த விடயத்தில் தாமதப்படுத்திக்கொண்டிருக்கவேண்டாம்.
பால்மா விலையை குறையுங்கள்
நியூசிலாந்தின் டொலரின் பெறுமதி 15 வீதத்தினால் வீழ்ச்சிகண்டுள்ளது. எனவே நியூசிலாந்திலிருந்து கொண்டுவரப்படும் பால்மா வகைகளின் விலையை குறைக்க முடியும். உடனடியாக இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறுகின்றோம். அத்துடன் நாட்டின் அண்மைக்காலமாக பாரிய மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது. எனவே மின்சார கட்டணத்தையும் குறைக்க முடியும். அந்தவகையில் மைத்திரி யுகத்தில் பாரிய விலைக் குறைப்புக்கள் இடம்பெறும் என்பதனையும் தெரிவிக்கின்றோம்.
ஆனால் அரசாங்கம் எரிபொருட்களின்
விலையை குறைக்காமல் இருக்கின்றது. ஜனாதிபதியின் பதாதைகள் அனைத்துஇடங்களிலும் உள்ளன. ஆனால்
மைத்திரிபால சிறிசேன மக்களின் மனதில் உள்ளார். எவ்வாறெ னினும் இவ்வாறு பதாதை செலவுக்காக எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளீர்களா என்று வினவு கின்றோம்.
இது இவ்வாறு இருக்க கிராமங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சமுர்த்தி கொடுப் பனவையும் அதிகரிப்பதாக கூறியுள்ளனர். இவை அனைத்தும் அரசியல் ஊழலாகும். இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலை இதன்மூலம் தெரிகின்றது என்றார்.

0 comments :
Post a Comment