தமது நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார காலஅவகாசம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பு இடம்பெற்றது.
அதன் போது கடந்த கால தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர்களான அனுரபிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ச, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர் என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும், அமைச்சர்கள் இந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்தார் என ஹசன் அலி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment