முஸ்லிம்களின் தெரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே -அப்துல் காதர் மசூர் மௌலானா



ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

முஸ்லிம்களின் தெரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என சிங்கள முஸ்லிம் இன நல்லுறவுக்கான வேலைத்திட்டத்தின் இணைப்பாளரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலாசகருமான அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்தார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் என இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் விளக்கமளித்தார்.

முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினம். அதுவும் சிறுபான்மையிலும் சிறுபான்;மை சமூகம். சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றை கொண்ட இலங்கை முஸ்லிம்கள் கடந்த காலங்களில் ஆட்சியில் பல தலைவர்களை சந்தித்துள்ளனர். அவர்களை ஆதரித்தும் உள்ளனர். அவர்கள் வெற்றி பெற உதவியும் உள்ளனர். இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் நாட்டுத்தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஒன்றை நாம் அனைவரும் எதிர்நோக்கியிருக்கின்றோம். இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன?

இன்று அரசியல் வட்டராங்களில் எழுப்பப்படும் பரபரப்பான கேள்வி இதுவே. இந்தத் தேர்தலில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்துடனும் கவனமாகவும் வாக்குகளை பிரயோகிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கண்மூடித்தனமாக, எழுந்தமான முறையில் பொறுப்பில்லாமல் கேட்பார் பேச்சை கேட்டு நமது வாக்குகளை பிரயோகித்தால் அது நமக்கும் சமூகத்திற்கும் செய்யும் பாரிய துரோகமாகிவிடும்.

'கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பி விடக்கூடாது'

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின்னர் நமது சமூகத்;திற்கு கிடைத்த நன்மைகளை, கௌரவங்களை நாம் மனசாட்சியுடன் நெஞ்சை தொட்டு எண்ணி பார்க்க வேண்டும். பிரேமதாசவின் ஆட்சிக் காலத்திலே புலிகளினால் 24 மணி நேர காலக்கெடுவுக்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப வழிவகுத்த தலைவர் யார்?

கோர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கு கிழக்கில் சமாதானத்தை நிலைநாட்டி நாடு முழுவதும் அமைதியான நிலையை தோற்றுவித்த பெருமை யாரைச் சாரும்?

இனங்களுக்கு இடையே நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் சௌஜன்யத்தையும் உருவாக்க அல்லும் பகலும் பாடுபட்ட தலைவன் யார்?

பாரிய கலவரங்களை தடுத்து அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் அழிவில் இருந்து பாதுகாத்தது யார்?

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமான முஸ்லிம்களுக்கு தொழில்களை வழங்கி அவர்கள் வாழும் பிரதேசத்தில் அபிவிருத்தியை மேம்படச் செய்தவர் யார்?

இவற்றுக்கெல்லாம் ஒரே பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இது நமது மனச்சாட்சி சொல்லுகின்ற விடயம். நன்றியுடைய சமூதாயமென மார் தட்டும் நாம் எதிர்க்கட்சிகளின் மாய வலைக்குள் சிக்கி எதிரணியினருக்கு வாக்குப் போடுவது எந்த வகையில் நியாயமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரதிர்ஷ்டியான தலைமைத்துவத்தை மீண்டும் ஏற்பதற்கு முஸ்லிம்கள் திடசங்கற்பம் பூண்டுவிட்டனர். எதிர்க்கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து முஸ்லிம்களை திசை திருப்ப முயல்கின்றனர். இவர்களின் பம்மாத்து அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் எடுபடாது. இனமத பிரதேச வேறுபாடுகளுடன் பிரிந்து கிடந்த நமது இலங்கையை ஒற்றுமைப்படுத்தி ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளே சேறுபூசி வருகின்றனர். அவரது திறமை சாணக்கியம் துணிவு கண்டு கதிகலங்கி நிற்கின்றனர்.

வெளிநாட்டு சக்திகளின் சதி வலையில் சிக்குண்ட சில அடிப்படைவாதிகள் ஜனாதிபதி மீது சேறு பூசுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சூழ்ச்சியினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் எதிரணியின் பொதுவேட்பாளரை எமது ஜனாதிபதியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது முஸ்லிம்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கக்கூடிய ஒரேயொரு தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். முஸ்லிம்கள் இவ்வாறான வெளிநாட்டு சக்திகளின் சதிவலையில் இருந்து பாதுகாப்பு பெறவேண்டுமானால் எமது ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியே.

தற்போது முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொது எதிரணி வேட்பாளர் உண்மையாக முஸ்லிம்கள் மீது அன்பு கொண்டிருந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட வேளையில் ஏன் குரல் கொடுக்க தவறிவிட்டார்;?

எனவே முஸ்லிம்களாகிய நாம் இத்தருணத்தில் நன்கு சிந்தித்து சமயோசிதமான முறையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி இந்நாட்டிலே ஜனாதிபதியாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாவதை எந்த சக்கியாலும் தடுக்க முடியாது என்பதை எமது அமைப்பு ஆணித்தரமாக கூறுகின்றது. எனவே முஸ்லிம்கள் இந்த வெற்றியின் பங்காளிகளாக மாறுவேண்டும்.

இவ்வாறு சிங்கள முஸ்லிம் இன நல்லுறவுக்கான வேலைத்திட்டத்தின் இணைப்பாளரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :