முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனக்கு 100 மில்லியன் ரூபா வழங்க முன்வந்தது யார் என்று கூறவேண்டும். இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சிடம் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் சமூக அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கலாம். அவரின் கூற்று கட்சியின் விதிமுறையை மீறியுள்ளதா? என்பது குறித்து கட்சியின் உள்ளக மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
எதிரணியில் இணைந்துகொண்டுள்ள முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க அரசாங்கத்தில் நீடிப்பதற்கு தனக்கு 100 மில்லியன் ரூபா வழங்க முன்வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் தனக்கு 100 மில்லியன் ரூபா வழங்க யார் முன்வந்தது என்பதனை கூறவேண்டும். தனக்கு தெரிந்த விடயத்தை மறைப்பது தவறாகும்.
கேள்வி நவீன் திசாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில் விசாரணை நடத்தப்படும்.
கேள்வி முறைப்பாடு செய்துள்ளீர்களா?
பதில் கட்சி மட்டத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி தேர்தல் முடியும் வரை கூறமாட்டேன் என்று நவீன் திசாநாயக்க கூறியுள்ளாரே?
பதில் அவ்வாறு அவர் கூற முடியாது. தனக்கு யார் நிதி வழங்க முன்வந்தனர் என்று கூறவேண்டும்.
கேள்வி யார் விசாரிக்கப்போகின்றனர்?
பதில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளோம். தேவையான செயற்பாடுகளை அந்த அமைச்சு முன்னெடுக்கும்.
கேள்வி நவீன் திசாநாயக்கவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில் நாம் அது பற்றி கூற முடியாது. நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.
கேள்வி தன்னை பணத்துடன் சிலர் அணுகியதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் தெரிவித்துள்ளாரே?
பதில் அது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேள்வி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனும் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவும் கட்சி தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனரே?
பதில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முறைமை உள்ளது.
கேள்வி இந்த எம்.பி. க்கள் இருவரும் கூறுவதைப் போன்றவர்கள் ஆளும் கட்சியில் உள்ளனரா?
பதில் இவர்கள் கூறுவது போன்றவர்கள் இருப்பார்களானால் சிவில் சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேள்வி ஆனால் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக யாராவது ஏதாவது கூறினால்?
பதில் கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்"
கேள்வி அதாவது ஜனக்க பண்டார தென்னக்கோன் மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில் அவ்வாறு நான் கூறவில்லை. யாராவது கட்சியின் விதிமுறைகளை மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி ஜனக்க பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்திலும் இதனை தெரிவித்துள்ளாரே? என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
பதில் பாராளுமன்றத்தில் சிறப்புரிமையின் அடிப்படையில் கூறுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.
கேள்வி எனினும் ஜனக்க பண்டார தென்னக்கோன் நாட்டு மக்கள் கனவம் செலுத்தக்கூடிய விடயத்தை கூறியுள்ளாரே?
பதில் மக்களுக்கு பாதிப்பு இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இது கட்சியின் உள்மட்டத்தில் பார்க்கப்படவேண்டிய விடயம்.
கேள்வி ஜனாதிபதியின் பதாதைகள் நாடு முழுவதும் உள்ளனவே?
பதில் தேர்தல் என்று வரும்போது இவ்வாறு இருக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை செய்யும். இவ்வாறு செய்யாமல் தேர்தலில் செயற்பட முடியாது. இது தேர்தல் சட்டத்தில் உள்ள பிரச்சினை. அது குறித்து விரிவாக ஆராய்ந்துவருகின்றோம்.
கேள்வி இதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கின்றது?
பதில் கட்சியில் அதற்கான நிதியம் உள்ளது.
நன்றி : வீரகேசரி


0 comments :
Post a Comment