எம்.வை.அமீர்-
அம்பாறை மாவட்டத்தின், இறுக்கமான குடியிருப்புக்களைக் கொண்ட சாய்ந்தமருதை ஊடறுத்துச் செல்லும் தோணா, என அழைக்கப்படும் வெட்டு வாய்க்காலில் இருந்து ஆரம்பித்து காரைதீவை ஊடறுத்து, சாய்ந்தமருது முகத்துவாரத்தை வந்தடையும் நீரோடையின் ஊடாகவே மழைகாலங்களிலும் ஏனைய காலங்களிலும் இப்பிராந்தியத்தில் சேரும் மேலதிக நீர் கடலைச் சென்றடைகின்றன. கடந்த 2004 ல் இடம்பெற்ற சுனாமி கடல்பேரலையின் போதும் பாரியளவில் உட்புகுந்த கடல் நீரை வெளியேற்றியதும் இந்த தோணாவேயாகும்.
இவ்வாறு காலம் காலமாக சாய்ந்தமருதை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து விடுவித்த சாய்ந்தமருது தோணா சுனாமியின் பின்னரும், அண்மையில் கல்முனை மாநகரசபையின் வேண்டுதலிலும் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுடைய ஏற்பாட்டிலும் அம்பாறை மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடனும் சுத்தம் செய்யப்பட்டன. இறுதி நேரத்தில் அம்பாறை மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் சுத்தம் செய்யப்பட்ட இத்தோணா திட்டமிட்ட அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது இப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் கவலையாகும்.
தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதாலும் பாரியளவில் ஆத்துவாளை இத் தோணாவை மூடியுள்ளதாலும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாலும் சாய்ந்தமருது, வெள்ளம் ஒன்றை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாததாக ஆகிவிடும்.
கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுவின்தலைவரும் பாராளமன்ற உறுப்பினரும் கிழக்குமாகாண சபையின் உறுப்பினர் உட்பட மாநகரசபையின் முதல்வர் முதல் பிரதிமுதல்வர் உறுப்பினர்களும் இத்தோடு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் அங்கலாக்கின்றனர்.
மக்கள் பிரதி நிதிகளுக்கு அரசாங்கத்தால் பாரியளவில் அபிவிருத்திக்காக தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளதால் குறித்த நிதி மக்களுக்கு பயன்தரக்கூடிய இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பாகும்.


0 comments :
Post a Comment