இன அடிப்படையில் நிர்வாக மாவட்டங்களை அமைக்க முடியாது என்று அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. வரவு-செலவு திட்ட குழு நிலை விவாதத்தின்போது உரையாற்றிய பிரதமர் தி.மு.ஜயரத்ன இதனைத் தெளிவாக கூறினார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள தொகுதிகளை சேர்த்து தனியான நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுள்ளது குறித்து ஐ.தே.க எம்.பி விஜயதாஸ ராஜபக்ஷ விமர்சித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தனது கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை தொடர்பு படுத்தி பேசிய விஜயதாஸ எம்.பி, இன அடிப்படையில் மாவட்டங்களை உருவாக்கும்படி கேட்டது எந்தவொரு கட்சிக்கும் பொருத்தமல்ல.
இது முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பிரிவினை எண்ணத்தை தூண்டிவிடும். இது நாட்டைப்பிரிக்கும் முயற்சிக்கும் வழிவகுக்கலாம் என அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஜயரத்ன ஒரு காலத்தில் தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறான எண்ணங்களை கொண்டிருந்தனர்.
இது வே.பிரபாகரனின் தனி நாட்டுக்கான ஆயுதப்போராட்டத்தில் முடிந்தது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வடக்கு- கிழக்குக்கு வெளியே பெரும்பான்மை மக்களுடன் சமாதானமாக ஒற்றுமையாக வாழ்கின்றனர். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை விட கூடுதலான தமிழ், முஸ்லிம் மக்கள் தெற்கில் வாழ்கின்றனர்.
எனவே, இன அடிப்படையிலான மாவட்ட கோரிக்கை வலுவற்றது. மறைந்த அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்ரப்பிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவிக்கும் படி முதலில் ஆலோசனையை வழங்கியவர் தானே என்றும் பிரதமர் ஜயரத்ன கூறினார்.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து தனியான நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையில் பிழையில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் அம்பாறையும் மட்டக்களப்பும் ஒரே மாவட்டமாகவே காணப்பட்டது. 1961 ம் ஆண்டு அம்பாறை தனியான மாவட்டமாக பிரிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமாக மாறியது.
அன்று முதல் இன்று வரையில் புதிய நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் 74 வீதமானவர்கள் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் இதுவரையில் தமிழ் பேசும் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.
சிங்களவர்களே அரசாங்க அதிபர்களாக கடமையாற்றி வருகின்றனர். இந்த கோரிக்கையை முஸ்லிம் ஒருவர் முன்வைத்த காரணத்தினால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக சிலர் பிழையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே காணப்பட்ட விடயத்தை மீள அமுல்படுத்துமாறே எமது கட்சி கோரி நிற்கின்றது என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment