தேசம் காண்போம் நேசமுடன் உடன்பாடு வளர்ப்போம் உறுதியுடன்!ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநாட்டில் பிரகடனம்!

அஷ்ரப் ஏ சமத்-

மூகங்கள் மற்றும் நாகரிகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, கலந்துரையாடல் என்பவற்றை அதிகமாக வலியுறுத்தும் ஒரு  காலப் பகுதியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தப் புரிந்துணர்வு முன்னெப்போதுமில்லாதளவு  நலிவுற்றிருப்பதே இதற்குக் காரணம். அதனால் உலக அமைதி கேள்விக்குறியாகி மாறியுள்ளது. ஐ.நா விஷேடமாகவும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் குறிப்பாகவும் உலக அமைதியைப் பாதுகாக்கத் தவறிவிட்டன. தீவிரவாதங்கள்,  வன்முறைகள் உலக அரங்கில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மதங்கள் மீதான நம்பிக்கைகள் மக்கள் மனங்களில் சரிந்து  கொண்டிருக்கிருக்கின்றன. எமது நாட்டில் போர்ச் சப்தம் ஓய்ந்து சகவாழ்வும் நல்லிணக்கமும் அபிவிருத்தியும்  நல்லாட்சியும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இது சிதைந்து போயிருக்கும் உலக அரங்கில் எமது தேசத்துக்குக்  கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு என்றே கொள்ளப்பட வேண்டும். 

இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே நாம் இந்த அங்கத்தவர் தேசிய மாநாட்டை இன்று நடத்துகின்றோம் என இலங்கை  ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார். 

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62வது வருடாந்த தேசிய மாநாடு இன்று (15.11.2014) காலை 8.30 இரவு 8.30 மணி வரை  முதல் சாய்ந்தமருது லீ மரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் தலைமையில் நடைபெற்ற வருடாந்த தேசிய மாநாட்டில்  ஜமாஅத்தே இஸ்லாமியின் பகுதிகள் மற்றும் துணை அமைப்புகளின் கடந்த வருட செயற்பாடுகள் குறித்து அறிக்கைகள்  சமர்ப்பிக்கப்பட்தோடு, அங்கத்தவர்களைத் தகைமைப்படுத்தும் நிகழ்ச்சி, ஆளுமை விருத்தி நிகழ்ச்சி, அமீர்  தெரிவு, மஜ்லிஸுஷ் ஷூரா தெரிவு, பிராந்திய நாஸிம்கள் தெரிவு, பிரமுகர் அமர்வு மற்றும் கலை, சலாசார  நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாநாட்டுப் பிரகடனம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

01.யுத்த சூழ்நிலையை இல்லாமல் செய்து பயங்கரவாத்தை முற்றாக துடைத்து விட்ட மகிமைக்கு அண்மைக்கால உலகில் சிறந்த  எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரே நாடு நம் நாடு என்றவகையிலும் நல்லாட்சி, அபிவிருத்தி தார்மீகம்  போன்றவற்றில் முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அமையப் பெற்ற ஒரு சூழ்நிலை எமக்கு முன்னால்  நெருக்கமாக இருக்கிறது என்ற வகையிலும் தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் நல்லவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து  சிறுபான்மை சமூகங்களையும் அரவணைத்து... நிபுணத்துவங்களைக் கூட்டிணைந்து செயல்பட வேண்டும். என இலங்கை அரசை மாநாடு  வினயமாக வேண்டி நிற்கின்றது.

02.தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் மதங்களினதும் அவை போதிக்கும் விழுமியங்களினதும் வகிபாகத்தைக் புறக்கணித்து  செயல்படுகின்ற சூழல் உருவாகுவதை அனைத்து மதங்களினதும் போதகர்கள் மற்றும் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.  எனவும் மதங்களால் மட்டுமே மனிதர்களைப் புனிதர்களாக மாற்றலாம் என்ற எண்ணக்கரு அழிந்து விடாமல் அவர்கள்  பாதுகாக்க வேண்டும் எனவும் மாநாடு வேண்டுகோள் விடுகின்றது.

03.காலநிலை, இட அமைவு, நேர வலயம், இயற்கை வளங்கள், இயற்கையான சுபாவம் கொண்ட மனிதர்கள் எனப் பல்வேறு  சிறப்புக் கூறுகள் அரிதாகக் கூட்டிணைந்திருக்கும் ஓர் அற்புதமான தேசம் இலங்கை என்ற வகையில் இலங்கையை  ஆசியாவின் அதிசயமாக மட்டுமல்ல உலகின் அதிசயமாகவே பரிணமிக்கச் செய்யலாம். அத்தகைய தொரு தேசத்தின்  சிற்பிகளை இன, மத. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று இணம் காண்பதும் அந்த தேசச் சிற்பிகளின் கைகளால்  நாட்டின் மகிமை உயர்ந்து ஓங்க வேண்டும் என்றும் மாநாடு தனது தேசப்பற்றை பிரகடனம் செய்கிறது.

04.நான்கு உலக மதங்கள், இரண்டே மொழிகள் என வேறுபாடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் எமது நாட்டில்  முரண்பாட்டுச் சூழலை வளர்த்து நாட்டை சின்னாபின்னப்படுத்தாமல் உடன்பாட்டுச் சூழலை உருவாக்குவதன் மூலம்  நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்து வினைத்திறனையும் விளைதிறனையும் கூட்டுவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற  அனைத்து சக்திகளும் அயராது உழைக்க வேண்டுமென மாநாடு கேட்டுக் கொள்கிறது.

05.முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் ஒரு சூழலில் நாம் இன்று வாழ்கிறோம்.  முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் உன் வெளிப் பிரச்சினைகள் பல, இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள்,  பொறுப்பாளர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் அனைவரும் சமூகத்தை வழிநடத்தும் தமது பொறுப்பை செவ்வனே  உணர வேண்டும், தமக்கிடையே இருக்கும் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல்... உலக இலாபங்களை முற்படுத்தாமல்... அல்லாஹ்வின் திருப்தியை நாடி உடன்பாட்டுப் புள்ளிகளில் ஒன்றினைந்து செயல்பட முன்வர வேண்டும் எனவும்  மாநாடு சம்பந்தப்பட்டவர்களை பணிவாக வேண்டிக் கொள்கிறது.

06.மத்திய கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலை தொடர்பில் மாநாடு தனது ஆழ்நத கவலையை  வெளிப்படுத்துகின்றது. இஸ்லாத்தின் எதிரிகளது சதிவலைகளில் சிக்கி இஸ்லாத்தின் பெயரால் வன்முறைகளை வளர்க்கும்  கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள் துணைபோகக்கூடாது என்றும் மாநாடு வேண்டுகோள்  விடுக்கின்றது.

07.அதே நேரம் பலஸ்தீன் உட்பட உலகில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அணைத்துப் பூமிகளும் அவற்றின் பூர்வீக  மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். அந்தப் பூமிகளில் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும்  சுதந்திரத்தையும் பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்வதோடு அவ்வாறு  அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மாநாடு பிரார்த்திக்கின்றது

08.கொலைகள், ஆள் கடத்தல்கள், மற்றும் இலஞ்சம் ஊழல், மோசடி, நிர்வாக சீர்கேடுகள், பணிப்  புறக்கணிப்புகள், மற்றும் மாணவர், தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள், சமூகங்களுக்கிடையிலான விரிசல்கள்  என்பன தொடர்வதையிட்டு மாநாடு ஆழ்ந்த கவலையை வெளியிடுகிறது. அண்மையில் நாட்டை உசுப்பிவிட்ட கொஸ்லந்தை  மண்சரிவு அனர்த்தம் எம்மை சோகத்தில் ஆழ்த்தின... இயற்கையாகவோ, செயற்கையாகவோ துயரங்கள் இந்த நாட்டைத்  தொடராதிருக்க நாம் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்திக்கின்றோம். அதே வேளை சம்பந்தப்பட்ட  தரப்பினர் இத்தகைய துயரங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என  மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.

09.இறுதியாக நாட்டின் ஒவ்வொரு மைந்தனும், ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு தலைவனும் இதய சுத்தியோடு  செயல்பட்டு எமது தாய் நாட்டை நன்மைகளின் பக்கம் இட்டுச் செல்வதற்குப் பங்களிப்புச் செய்பவர்களாகவும் 

அதன் வளமான சுபீட்சமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்களாகவும் மாற வேண்டும் என்ற ஆவலை மாநாடு  வெளிப்படுத்துகின்றது. நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட ஒரு தேசம் அதன் வரலாற்று மகிமைகளை  கௌரவித்து முன்னேற்றுவதற்கான பாடங்களை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாநாடு தனது  எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றது. தூய தேசம் காண விரும்பும் சக்திகளுக்கு மாநாடு தனது முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

தேசிய மாநாட்டில் ஓர் அங்கமாக நடைபெற்ற பிரமுகர் அமர்வில்;, விஷேட அதிதிகளாக அம்பாறை மற்றும்  மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்கள்  மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :