நூலறிமுகம்; ஜெஸ்மி எம். மூஸாவின் தேடலின் ஒரு பக்கம் - (ஓர் ஆய்வியல் நோக்கு)

நூலறிமுகம்
நூல் : தேடலின் ஒரு பக்கம் - (ஓர் ஆய்வியல் நோக்கு)
நூலாசிரியர் : ஜெஸ்மி எம். மூஸா
வெளியீடு : தென்றல் வெளியீட்டுப் பணியகம், மருதமுனை
விலை : 200/-


நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்

ருதமுனை ஊர் பல அறிஞர்களையும், அரசியல்வாதிகளையும், இலக்கிய கர்த்தாக்களையும் மட்டுமன்றி கவிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், என்று எண்ணற்ற கலைஞர்களை இந்நாட்டுக்குத் தந்துள்ளது.

அந்த மண்ணுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அதுதான் முஸ்லிம்களுக்கே உரித்தான நெசவுத் தொழிலையும் தந்து, இன்றுவரை அதனை அழியாது பாதுகாத்து வருகின்ற ஒரு ஊராகும். அந்த வழியில் இளம் கவிஞர், பேச்சாளர், விமர்சகர், பன்னூலாசிரியர் போன்றவற்றில் காலூன்றி இன்று ஒரு வெப்பதளத்தையும் நடாத்திக் கொண்டிருக்கும் சிறந்த கலைஞராக தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளவர்தான் நூலாசிரியர் ஜெஸ்மி எம். மூஸா அவர்கள்.

'தேடலின் ஒரு பக்கம்' எனும் இவரது ஆய்வியல் நோக்கு சார்ந்த இந்நூல் ஒன்பது தலைப்புக்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவர் தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளில் வெளிவந்த சில கட்டுரைகளின் தொகுப்பாகவே இந்நூல் காணப்படுகின்றது. உண்மையில் இன்று வாசிக்கவே நேரமற்றிருக்கின்ற காலகட்டத்தில் அதனை வாசித்து, அதனை பாகுபடுத்திப் பார்க்கின்ற தன்மை ஒருசிலரிடமே காணப்படுகின்றது. அந்தவரிசையில் நூலாசிரியர் இந்த ஆய்வியலை நோக்கி எழுதியுள்ளார்.

'விரிவான தகவல்களைத் தரும் விமர்சன ரீதியாக அமைந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகள்' எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் வழங்கியுள்ள சிறப்புரையில் 'தென்கிழக்குப் பிரதேசத்திற்குத் தனியான இலக்கியப் பாரம்பரியமுண்டு. வாய்மொழி இலக்கியப் பாரம்பரியமும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களின் இலக்கியப் பணியும் இப்பாரம்பரியத்திற்கு செழுமை சேர்ப்பனவாகவும், ஈழத்தில்; இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணியை அரங்கேற்றிய பெருமை மருதமுனைக்கு உண்டு. அத்தகைய சிறப்புமிக்க மருதமுனையின் தவப்புதல்வன் ஜெஸ்மி எம். மூஸா அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். கலைக்குடும்பத்துப் பாரம்பரியமிக்க இந்நூலாசிரியர் தமிழ்துறையில் சிறப்பான முறையில் இலக்கியம் பயின்றவர். அந்த இலக்கியப்பணியுடன் நின்றுவிடாமல் பத்திரிகைகளில் எழுதிவருகின்றமை பாராட்டுக்குரியதாகும்' என்கிறார் மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லாஹ்.

பன்னூலாசிரியரும், மருதமுனையின் முத்தாகக் கருதப்படுகின்ற மூதறிஞர் ஆ.மு. ஷரிபுத்தீனின் தனயனுமான டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீனின் வாழ்த்துரை காணப்படுகின்றது. 'இச்சிரமமானபணி படித்த இளையவர்களால்தான் தொடரப்பட வேண்டும்; என்பதற்கு இந்நூல் முன்னுதாரணமாகும்' எனும் தலைப்பில் வாழ்த்தியுள்ளார். வாழ்த்தின் ஓரிடத்தில் 'இந்நூல் தனிமனிதத் தேடலில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் கவித்துவ ஆளுமை பற்றியும், அவர்தம் அரசியல் நிலைப்பாட்டினை இலக்கியத்தின் வாயிலாக வெளிப்படுத்திய வித்துவத்தையும், தான் கொண்ட உசாத்துணை நூல்களிலிருந்து பெற்ற தகவல்களுடன்கூடி நிரூபணம் செய்கின்றார் ஜெஸ்மி எம். மூஸா' என்கிறார் ஜின்னா ஷரிபுத்தீன்.

ஊர்ப்பற்று இருப்பதோடு உலகளாவிய நோக்கொன்றும் ஜெஸ்மி மூஸாவிடம் இருப்பதாகக் கூறி, வாழ்த்துரை ஒன்றினையும் வழங்கியுள்ளார் சிரேஷ்ட விரிவுரையாளர் க. இரகுபரன் அவர்கள். தினகரன் ஆசிரிய பீடத்தினைச் சேர்ந்த ஆனோஜா ஸ்ரீ காந்தன் வழங்கியுள்ள வாழ்த்துரையில் சகோதரன் எம். மூஸாவின் இந்த ஆய்வியல் நோக்கு நூலானது வௌ;வேறுபட்ட விடயதானங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது. தினகரன் பத்திரிகையிலே இத் தொகுப்புக்களில் பெரும்பாலானவை வெளிவந்துள்ளன. மிகவும் இளம் வயதில் இவ்வாறான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுவரும் நூலாசிரியரின் படைப்புக்களை வாசிக்கும்போது அவற்றின் பணி ஆச்சரியப்பட வைக்கிறது என்கிறார் ஸ்ரீகாந்தன்.

எங்கள் தேசம் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ரா. அப்துல்லாஹ் அஸ்ஸாம்(இஸ்லாஹி) தன்னுடைய ஆசியுரையில் ஊடகவியல், கல்வியல் எனும் மிக முக்கியத்துவம் மிக்க இரு துறைகளில் தடம்பதித்திருக்கும் ஜெஸ்மி எம். மூஸாவின் ஆய்வுப் பணிகள் மேற்படி இவ்விரு தளங்களிலும் தொடர வேண்டுவதாகக் கூறுகின்றார்.

'எனது மாணவரைப் பற்றி..' எனும் தலைப்பில் முன்னாள் கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஜெலீல் அவர்களும், வெளியீட்டுப் பணியகத்தின் பணிப்பாளரினதும் உரைகளைத் தொடர்ந்து 'வலிகளும் வருடல்களும் எனக்குப் பழக்கப்பட்டவை' எனும் தலைப்பில் தன்னுரையினை வழங்கியுள்ளார் நூலாசிரியர்;. ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார். அதாவது 'பள்ளிப்படிப்பு, வளாகத்து வாழ்க்கை, வாழ்வின் தேடல், இலக்கிய நகர்வு என எல்லாமே எனக்குள் வலிகளும் வருடல்களும் நிறைந்தவைகளே. அவை பழக்கப்பட்டவையாகியும் விட்டன. என்னை நசுக்கிவிட எத்தனித்துத் தோல்வி கண்டவர்கள்தான் ஏராளம். உயர்த்தி விட்டு உரம் சேர்த்தவர்களோ சொற்பம். படிப்பே வெதும்பித் திசைமாறிய என்னைக் கண்டெடுத்துப் பட்டைதீட்டிய பெருமை என் கணிதப் பாட ஆசிரியர் எம். ஏ.எம்.சிறாஜூதீன் அவர்களுக்கே உண்டு அவரது முயற்சியின் எத்தனிப்பே என் உயர்வுகள்' என்கிறார் நூலாசிரியர்.

மேலும் ஒருகட்டத்தில் 'பொறாமைகளும் மனக்கிலேசங்களும் நிறைந்ததே எழுத்துத்துறை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. வெறும் கோதுகளைக்கூடக் கோபுரமான படைப்புக்கள் எனக்கூறிய பலர் என் நூல் விடயத்தில் காட்டிய தயக்கங்கள் எனது வெளிப்படுத்தலின் தரத்தை எனக்குள் இன்னும் மேன்மைப்படுத்தியது' எனவும் கூறுகின்றார். உண்மையில் இன்று எழுத்தாளர்களே எழுத்தாளர்களை கேவலப்படுத்தும் நிலைமைகள் பரவலாகவே காணப்படுகின்றது. நூலை வெளியிடுகின்றபோது அழைப்பிதழில் பெயர் வரவில்லை என்பதற்காகவும், தன்பெயரை விளிக்கவில்லை என்பதற்காகவும் கோபப்படுகின்றவர்கள் பலர் எம்மத்தியில் எழுத்தாளர்கள் என்கிற லேபலுடன் உலாவுவதுதான் மிக மோசமான செய்தி என்பதற்கு நானே சாட்சியாவேன்.

இவரது தேடலில் தான்சார் அரசியலைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்தியவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப், தமிழியல் சூழலில் பின் நவீனத்துவமும் தவறான கற்பிதங்களும், இலக்கியப் பரப்பின் பன்முகத்தன்மை எம்.எச்.எம். ஷம்ஸ், தென்கிழக்குப் பிரதேசத்தவர்களிடமிருந்து தூரமாகிச் செல்லும் நாட்டார் பாடல்கள், மருதமுனை ஈன்ற புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், நீக்ரோவியம் ஒரு பண்பாட்டு எதிர்ப்பின் வெளிப்பாடே, ஈழத்துச் சிறுகதையின் முன்னோடி பித்தன் கே.எம்.ஷா, அறிஞர் அல் கஸ்ஸாலி கவிஞர் அல்லாமா இக்பால், நகைச்சுவையும் சுருக்கமும் மிக்க லிமரிக்ஸ் கதைகளின் தோற்ற வளர்ச்சியும் மீள் அவதாரத்தின் தேவையும் ஆகிய ஒன்பது தலைப்புக்களில் இந்நூல் தேடி ஆய்கின்றது.

சரி, நூலூக்குள் நுழைந்தால் 'தான்சார் அரசியலைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்தியவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் எனும் தலைப்பில் முதலாவது கட்டுரை காணப்படுகின்றது. இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பங்குபற்றலை மேம்படுத்தியவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள். இலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். இவர் பல்வேறு காலகட்டங்களில் கவிதைகளைப் படைத்திருக்கின்றார்.

அதில் ஒருகவிதையிது 
கற்பனாவாதம் பேசி
காலத்தை வீணடிக்கும்
விற்பன்னர்களிலிருந்து
விலகிச் செல்கின்றேன்
தாடிகளை வளர்க்கும்
தந்திரத்தால் புதுவுலகம்
காணத் துடிக்கின்ற
கபோதிகளை விட்டொழிந்து
ஓடியென் பாதையிலே
ஒழுங்காகச் செல்கின்றேன். என்கிற கவிவரிகள் அரசியலில் முற்போக்குச் சிந்தனையை ஊட்டுகின்றது.. அடுத்ததாக தமிழியல் சூழலில் பின்நவீனத்துவமும், தவறான கற்பிதங்களும் எனும் தலைப்பில் சமகால வாதங்களுக்கான முன்னோட்டம் பற்றிய கட்டுரையினை தந்துள்ளது இந்நூல். எந்தவொரு விடயத்திலும் பழமைக்கு அடுத்து வருவதையே நவீனத்துவமென்பர். புதிய கருத்துக்களை அல்லது உலகியல் மாற்றங்களைத் தொடர்ந்து இந்நிலை ஏற்படும். இந்நவீனத்துவத்தின் அடுத்தகட்ட நகர்வோ அல்லது வளர்;ச்சியே பின் நவீனத்துவம் (Pழளவ அழனநசnளைஅ) என அழைக்கப்படுகின்றது என்கிறார் இந்நூலாசிரியர்.

இலக்கியப் பரப்பின் பன்முகத்தன்மைகள் பலவற்றைக் கொண்ட தேடலின் வழியூடாக கட்டுரையினையினை விளக்கும்விதம், இவரது ஆளுமை இலக்கியத்துவப் பண்பு மேலோங்கிக் இலக்கிய செறிவார்ந்தாகக் காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி ஒவ்வொரு கட்டுரைக்குமான விளக்கங்களுக்காக அதன் பின்னணிகளை தேடியாய்ந்துள்ள இந்நூலாசியரின் மொழிநடை, சொற்பிரயோகம், விளக்கம் போன்றன கட்டுரையின் அடிஆழத்தினைத் தொட்டுக் காண்பிக்கின்றது. தேடலின் ஒரு பக்கம் மிகப் பெறுமதியான தேடல். வாசிக்க வேண்டிய தேடல். இலக்கியமனமிக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :