தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தந்தைதான் மறைந்த மாமனிதரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம் அஸ்ரப். அன்னாரின்; 66வதுபிறந்த தின நினைவு வைபவமும், ஸ்தாபகதின நிகழ்வும் அண்மையில் அப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மேற்படி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
அக் கூட்டத்தின் பிரதம சிறப்பு பேச்சாளராக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொதுச் செயலாளரும், மு.காவின் உச்ச பீட உறுப்பினரும், மஜ்லிஸ் சூராவின் பிரதித் தலைவரும் துறைமுகங்கள், அபிவிருத்தி கப்பல்துறை, புனர்வாழ்வு அமைச்சின் இணைப்புச் செயலாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் கலந்து கொண்டு பேசினார்.
அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது, இங்கு அமைக்கப்பட்டுள்ள அழகான நவீன கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பு இவ்விடம் புல்லும், முள்ளும் நிறைந்த காடாக காட்சியளித்துக் கொண்டிருந்த இந் நிலத்தை எங்கள் கண்களால் நாம் அன்று கண்டோம்,
அவைகளை துப்பரவு செய்து இவ் வளாகத்தை இவ்விடத்தில் கட்டுவதற்காக அப்போதய உயர் கல்விப் பிரதி அமைச்சராக இருந்த விஸ்வ சுவர்ணபால தலைமையில் கொழும்பிலிருந்து வந்த அமைச்சின் உயர்மட்டக் குழுவினரின் சிபார்சை பெறவும் இவ் விடத்தை பார்வையிடுவதற்காக வந்தபோது அவர்கள் அத்தனை பேரையும் நாம் அழைத்துக் கொண்டு உச்சி வெயிலின் அகோரத்தையும் பொருற்படுத்தாது இங்கிருந்த அடர்ந்த புற்காடுகளின் ஊடாக காணப்பட்ட கற்களும், முற்களும் தனது பாதங்களைப் பதம் பார்த்தபோதும் சளைக்காது இக் காணியை பல முறை சுற்றி வந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளில் நன்றாக அவர் நனைந்து கொண்டு இவ்விடத்தை பார்வையிட்ட அக்காட்சி இன்றும் என் கண் முன் தோன்றுகின்றது.
அன்று அவர் சிந்திய அந்த வியர்வையின் விளைவாக இப் பல்கலைக்கழகம் இன்று இவ் விடத்தில் பிரமாண்டமாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. இங்கு கல்வி கற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றார்கள். இன்னும் வெளிவர இருக்கின்றார்கள் இவர்கள் அத்தனைபேரின் முயற்சிக்கும், வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் வித்திட்ட இம்மாபெரும் தலைவரை அவர் பிறந்த 66வதுவருட நினைவு நாளும் இச் சர்வகலாசாலை நிறுவப்பட்ட ஸ்தாபக தினமும் இன்றுதான். அதனை ஞாபகமூட்டும் வைபவமாக இவ்விழா இங்கு நடைபெறுவது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.
அப்பேற்ப்பட்ட அன்னாரின் கனவில் உருவான இந்த உயர் கல்வி நிறுவனத்தை நாம் எம் கண் இமைபோல் பாதுகாப்பது எமது எல்லோரின் கடமையாகும் என வேண்டிக்கொண்டார் .மேலும் இப் பல்கலைக் கழகத்தில் இது வரை பலதுறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற பட்டதாரிகள் இன்று நாடுபூராகவும் சேவையாற்றுவது இப் பல்கலைக் கழகத்தின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த பாக்கியத்தை நாம் பெற மறைந்த தலைவரின் மகத்தான பணி எவராலும் மறக்க முடியாது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல அரசியலிலும் பல புரட்சிகரமான மாற்றங்களை இந் நாட்டில் ஏற்படுத்திய மகா உன்னதமான ஒரு புருஸர்.
அவரின் ஆரம்ப கால இலக்கிய நண்பராக, 1970களில் இருந்து பின்பு சட்டக் கல்லூரியின் கனிஸ்ட மாணவனாக, சட்டத்தரணியாக மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை 1980யில் நாம் அரம்பித்த போது அதன் முன்னனிக் கட்சித் தோழனாக பழகும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமையும் பெரும் பாக்கியமாக கொள்கின்றேன். அவர் நடந்து வந்த கரடு முரடான பாதைகளை இன்று நினைவூட்டிப் பார்க்கும் போது அந்த நாட்களை நாம் இலகுவில் மறந்து விட முடியாது.
சம்மாந்துறையில் பிறந்து கல்முனையில் வளர்ந்து ‘பேரியலைக்’ கரம் பிடித்து கம்பளையில் கல்யாணம் முடித்து ‘அமான்’ என்ற ஒரே ஒரு செல்வப் புதல்வனின் தந்தையாக முழு நாட்டிற்கும் சேவை செய்தவர். புரண நிலா போன்று முகத் தோற்றம் பெற்றவர், சினிமாவில் வந்த சிவக்குமார் போன்று வசீகரமாகவும், கம்பீரமாக காட்சியளிப்பவர், காண்பவரை கவரும் காந்த சக்தியும் அவரிடம் காணப்பட்டது.
அரசியலில் கட்சிதமாக காய்களை நகர்த்திய பெருமை மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள்தான் . எப்பொழுதும் மும்மொழிகள் மீது காதல் கொண்டவர். கலாரசனை படைத்தவர், தமிழ்-இலக்கிய அறிவும், ஆற்றலும் கணீரென்ற குரலும், பேச்சு வன்மையும், மார்க்கப் பற்றும், மற்றவர்களை மதிக்கும் மனப் பாண்மையும் பொருந்தியவர் எனவும் அவரைப்பற்றி ஆழமாகவும், விபரமாகவும் விபரித்தார்.
இன்றய அரசியலில் மிக முக்கியபங்கை வகித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மூலமாக முழு நாட்டு முஸ்லிம்களின் விடிவிற்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு மறைந்த அந்தத் தலைவனுக்கு நாம் எல்லோரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இம் மாபெரும் நிகழ்வை மிகச் சிறப்பாக இன்று இப் பல்கலைக்கழக வளாகத்தில் நாம் ஒன்று கூடி இன்றைய தினம் அவரை ஞாபகப்படுத்தி இக் கூட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்த உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம் இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதர் அவர்களுக்கும் இங்கு பணிபுரியும் ஏனைய பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்; மாணவர்கள், உத்தியோகத்தர்கள் எல்லோரையும் நாம் இத் தருனத்தில் நன்றியுடன் அவர்களை பாரட்டக் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டத்தரணி கபூரின் ஆழமான பேச்சு மறைந்த அஸ்ரப் அவர்களின் பல பக்கங்களை தொட்டுச் சென்றதால் பல்கலைக்கழக பார்வையாளர்களாலும் மட்டுமல்ல ஏனைய பலராலும் பரவலாக பாராட்டைப் பெற்றது. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment