த.நவோஜ்-
அண்மைக்காலமாக திருகோணமலை தென்னமரவாடி தமிழ் மக்களுடைய வயல்காணிகளை ஆக்கிரமிப்பு செய்தமையும் மற்றும் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டமையும் அப்பகுதி விவசாயிகளிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களினால் மாகாண சபை அமர்வுகளின் போது எடுத்துரைக்கப்பட்டன. இது தொடர்பில் கடந்த 3ம் திகதி மாகாண காணி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணக் காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தமி;ழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவருமாகிய தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜெனார்த்தனன், மாகாண காணி ஆணையாளர், உதவி மாகாணக் காணி ஆணையாளர்கள் மாவட்ட நில அளவையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவாhர்த்தையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களால் தென்னமரவாடி மக்களில் காணி அனுமதிப் பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் தத்தமது காணிகளில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு ஏதும் அசௌகரியங்கள் ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது.
இதற்கு மாகாண காணி அமைச்சர் கடந்த காலங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட 129 காணி அனுமதிப்பத்திரங்கள் வைத்திருப்பவர்களை தத்தமது வயல் காணிகளில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், தேவைப்படும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குரிய வழிவகைகளை செய்து கொடுக்கவும் வேண்டும் என மாகாணக் காணி ஆணையாளரைப் பணித்தார்.
அத்துடன் 2013ம் ஆண்டு வழங்கப்பட்ட 31 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டதில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றினை இரத்துச் செய்து மீண்டும் பொருத்தமானவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணி அமைச்சரால் தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தண்டாயுதபாணி மற்றும் எஸ்.ஜெனார்த்தனன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் காணி அமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில் ஆரம்ப காலம் தொட்டு தென்னமரவாடி பகுதியில் 129 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டடிருக்கின்றன. பின்னர் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் 31 பத்திரங்கள் வழங்கப்பட்டன. எனவே வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யாமல் இருக்கின்ற படியே மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றே மாகாண சபை உறுப்பினர்களின் வேண்டுகோளாக இருந்தது. இருப்பினும் மாகாண காணி அமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வரை இடம் பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஏற்கனவே வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் உடையவர்கள் மாத்திரம் தத்தமது காணிகளில் விவசாயம் செய்ய முடியுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment